உதவி டாக்டர்கள் நியமனத்தில் இறுதி தீர்ப்பு உண்டு: உயர் நீதிமன்றம்
உதவி டாக்டர்கள் நியமனத்தில் இறுதி தீர்ப்பு உண்டு: உயர் நீதிமன்றம்
UPDATED : பிப் 25, 2025 12:00 AM
ADDED : பிப் 25, 2025 09:47 PM

சென்னை:
மருத்துவ கவுன்சிலில், நிரந்தரப் பதிவு இல்லை எனக் கூறி, அரசு டாக்டர்கள் பணிக்கான இறுதி பட்டியலில், 400 டாக்டர்களின் பெயரை நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உதவி டாக்டர்களுக்கு வழங்கப்படும் பணி நியமன உத்தரவுகள், இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள, 2,642 உதவி டாக்டர் பணியிடங்களுக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, கடந்த மாதம் 5ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு முடிந்து, 2,642 டாக்டர்களின் தேர்ச்சி பட்டியல், கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 400 பேர், 2024ம் ஆண்டு ஜூலை 15ம் தேதிக்கு முன் பதிவு செய்யவில்லை எனக் கூறி, அவர்களின் பெயர்கள் தேர்வு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், டாக்டர் சாய் கணேஷ் உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், கவுன்சிலில், எங்கள் பெயர் பதிவு செய்யப்படாததால், தற்காலிக பதிவுச் சான்றிதழை வைத்து, அரசு உதவி டாக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தோம்.
எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, சான்றிதழ்கள் வழங்க, காலதாமதம் செய்ததால், நிரந்தர பதிவு சான்றிதழ் பெற முடியவில்லை. எங்களுக்கும் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இறுதி பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும் என, குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி, தற்போது, தேர்வானவர்களுக்கு நாளை பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன என்றார்.
இதை ஏற்ற நீதிபதி, உதவி டாக்டர்களுக்கு நாளை வழங்கப்படும், பணி நியமன உத்தரவுகள், இவ்வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.