கல்விக்கடன் பாக்கி? வேலைக்கு செக்! எச்சரிக்கை விடுக்கும் வங்கி அதிகாரிகள்
கல்விக்கடன் பாக்கி? வேலைக்கு செக்! எச்சரிக்கை விடுக்கும் வங்கி அதிகாரிகள்
UPDATED : ஜூலை 05, 2025 12:00 AM
ADDED : ஜூலை 05, 2025 03:26 PM
கோவை:
கல்விக்கடன் வாங்கி கட்டாமல் விட்டு விட்டால், வேலை வாய்ப்பு, வீடு மற்றும் வாகனம் வாங்குவதில் சிரமம் ஏற்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி பயிலும் மாணவர்கள், பொருளாதார ரீதியாக பாதித்து, கல்வி கற்க சிக்கல் வந்து விடக்கூடாது என்பதற்காக, வங்கிகளில் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முன், வங்கிகளுக்கு சென்று, குறிப்பிட்ட வங்கியில் தான் வங்கிக் கடன் பெறப் போகிறேன் என்ற தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.
காரணம், கடந்த காலங்களில், குறிப்பிட்ட வங்கியில் கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் பலர், கடன் தொகையை செலுத்த தவறியிருந்தால், வாராக்கடன் அளவு அதிகமாக இருந்தால், குறிப்பிட்ட வங்கியில், கல்விக் கடன் வழங்க முடியாத சூழல் ஏற்படும்.
எனவே, இதுபோன்ற நிலையை தவிர்ப்பதற்காகவே, வங்கியில் அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில், கல்விக்கடன் வாங்கி, குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின், கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் இருந்தால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என, வங்கி அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
வங்கிகளில் வழங்கப்படும் கல்விக்கடனை, மாணவர்கள் முறையாக பயன்படுத்தும் அதே வேளையில், திருப்பி செலுத்துவதிலும் அக்கறை செலுத்த வேண்டும். தவறினால், அவர்களின் கிரெடிட் ஸ்கோர் மிகவும் பாதிக்கும். எதிர்காலத்தில், வீடு அல்லது வாகனம் வாங்க கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டால், அதுபோன்ற விஷயங்களுக்கு, இது தடையாக இருக்கும்.
வேலைவாய்ப்பு நிறுவனங்கள் சில, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் முன், குறிப்பிட்ட நபர்களின் கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கின்றன. கல்விக்கடனை கட்டாமல் இருப்பது வேலை கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
இன்று, திருமணம் செய்யும் போதும், சிபில் ஸ்கோர் சரிபார்க்கும் காலம் வந்திருக்கிறது. கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாத ஒருவர், வேறு எந்த கடனையும் பெற முடியாமல் போகலாம். எனவே, வாங்கிய கடனை முறையாக கட்டுவது தான் சிறந்தது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.