அரசு பள்ளிகளில் தரமான கல்வி; அமைச்சர் மது பங்காரப்பா உறுதி
அரசு பள்ளிகளில் தரமான கல்வி; அமைச்சர் மது பங்காரப்பா உறுதி
UPDATED : ஆக 19, 2025 12:00 AM
ADDED : ஆக 19, 2025 09:32 AM
பெங்களூரு:
தனியார் பள்ளிகளுடன், போட்டி போடும் வகையில், அரசு பள்ளிகளில் தரமான கல்விக்கும், கழிப்பறை நிர்வகிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும், என, மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:
பா.ஜ., - அனில்குமார்: மூன்று ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. அரசு தரமான கல்வி அளிக்க முயற்சித்தும், மாணவர் சேர்க்கை அதிகரிக்கவில்லையே ஏன்? பெற்றோருக்கு, அரசு பள்ளிகளின் மீது ஆர்வம் இல்லையா? தனியார் பள்ளிகளை போன்று, அரசு பள்ளிகளில் ஆய்வகம், கழிப்பறை வசதி இல்லை.
அமைச்சர் மது பங்காரப்பா: கடந்த இரண்டு ஆண்டுகளில், அடிப்படை வசதிகள் செய்வதற்கு, முக்கியத்துவம் அளித்துள்ளோம். தற்போது 5,000 பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்கி உள்ளோம். இதனால் அரசு பள்ளிகளில், சிறார்களை சேர்க்க பெற்றோர் ஆர்வமாக முன் வருகின்றனர்.
நடப்பாண்டு 144 உயர்நிலைப் பள்ளிகளை திறக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை சார்பில் 500 கர்நாடக பப்ளிக் பள்ளிகள், கே.கே.ஆர்.டி.பி., சார்பில் 1,000 கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் கட்டணம் பெறுவதில்லை.
மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி: கே.பி.எஸ்., பள்ளிகளை விதிகளின்படி துவக்குங்கள்.
மது பங்காரப்பா: புதிய கே.பி.எஸ்., பள்ளிகளை திறக்க கட்டுப்பாடு விதிப்போம். தனியார் பள்ளிகளுடன், போட்டி போடும் வகையில், அரசு பள்ளிகளில் தரமான கல்விக்கும், கழிப்பறை நிர்வகிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.