கற்றல் திறனை கண்டறியும் ஆசிரியர்கள்; தேர்ச்சி சதவீதம் சற்று உயர்வு
கற்றல் திறனை கண்டறியும் ஆசிரியர்கள்; தேர்ச்சி சதவீதம் சற்று உயர்வு
UPDATED : அக் 04, 2025 10:31 AM
ADDED : அக் 04, 2025 10:31 AM

பொள்ளாச்சி:
அரசு பள்ளிகளில், கடந்த திருப்புதல் தேர்வை ஒப்பிடுகையில், காலாண்டுத்தேர்வில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் சற்று உயர்ந்துள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கடந்த மாதம் காலாண்டு தேர்வு நடத்தப்பட்டது. அதில், பல பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான விடைத்தாள்கள் உடனுக்குடன் திருத்தி வழங்கப்பட்டுள்ளது.
அதில், 60 சதவீத பாடங்களை மையப்படுத்தி தேர்வு நடத்தப்பட்ட நிலையில், கடந்த திருப்புதல் தேர்வை ஒப்பிடுகையில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், 70 முதல் 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தப்பட்டுள்ளது. பள்ளி திறப்பு நாளில் விடைத்தாள் வழங்கப்படவுள்ள நிலையில், மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
காலாண்டுத்தேர்வில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. அதேநேரம், அரையாண்டு தேர்வை, முழு பாடங்களுக்கும் எழுத வேண்டும்.
அப்போது, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் சற்று குறைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து, முழு திருப்புதல் தேர்வை எதிர்கொள்ளும்போது, மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகி விடுவர்.
அதன்படி, தற்போதைய காலாண்டுத்தேர்வின் மதிப்பெண்களைக் கொண்டு, மாணவர்களின் தற்போதைய கற்றல் திறன் கணக்கிடப்படும். அதற்கேற்ப மாணவர்களின் பலவீனத்திற்கு ஏற்ப, அந்தந்த பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.