மாணவர்களின் ஆதார் விவரங்களை வங்கி கணக்கில் இணைக்க உத்தரவு
மாணவர்களின் ஆதார் விவரங்களை வங்கி கணக்கில் இணைக்க உத்தரவு
UPDATED : நவ 10, 2025 07:58 AM
ADDED : நவ 10, 2025 07:59 AM

கோவை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஆதிதிராவிட மாணவியர் மற்றும் சுகாதாரக் குறைவான தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகையை பெறுவதற்கு, மாணவரின் பெயரில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கு அவசியம். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 782 மாணவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை புதுப்பிக்காமலும், 1,793 மாணவர்கள் ஆதாரை வங்கிக் கணக்குடன் இணைக்காமலும் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால், இம்மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக, மாணவர்களின் ஆதார் விவரங்களை வங்கி கணக்குடன் இணைத்து, உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, மாவட்ட பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், 'எவ்வளவு முயற்சி எடுத்தாலும், சில மாணவர்கள் இன்னும் ஆதார் எண் பெறாமல் இருக்கின்றனர். 'பெற்றோரிடம் பலமுறை கூறியும், அலட்சியப்படுத்தி விடுகின்றனர்' என்றார்.

