இளம் தலைமுறையை ஊக்குவிக்க பாடுகிறார் பேரூர் தமிழ் கல்லுாரி மாணவி
இளம் தலைமுறையை ஊக்குவிக்க பாடுகிறார் பேரூர் தமிழ் கல்லுாரி மாணவி
UPDATED : டிச 15, 2025 07:56 AM
ADDED : டிச 15, 2025 07:57 AM
கோவை:
தொடர்ந்து 10 மணி நேரம். அதுவும், ஏழு அல்லது எட்டு நாட்கள், பாட்டு பாடுவதில் லயித்து போகிறார் திருப்பூரை சேர்ந்த தேவதர்ஷினி.
''ஆன்மிகத்தில் திளைத்திருக்கும் போது, எல்லாம் எளிதாக கைகூடும்,'' எனும் இவர், பேரூர் தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் மற்றும் தமிழ் கல்லுாரியில் இளம் இலக்கியவியல் இரண்டாம் ஆண்டு மாணவி.
2022ம் ஆண்டு பன்னிரு திருமுறைகளில், 8ம் திருமுறையான திருவாசகத்தில் உள்ள 658 பாடல்களை, 3 மணி நேரம் 11 நிமிடங்கள் ஓதி, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்டு' சாதனை புரிந்தார்.
இதற்கு அடுத்த வருடமே, பன்னிரு திருமுறைகளில் உள்ள 18 ஆயிரத்து 327 பாடல்களை, ஒரு நாளில் 10 மணி நேரம் என, 18 நாட்கள் பாடி 'நோபல் வேர்ல்டு ரெக்கார்டில்' இடம் பிடித்தார்.
நடப்பாண்டு, முருகப் பெருமானை போற்றி பாடக்கூடிய அருட்பாடல்களாக விளங்கும் முருகவேல் பன்னிரு திருமுறை, 5,414 பாடல்கள், ஒரு நாளில் 10 மணி நேரம் என, 8 நாளில், 77 மணி நேரம் 30 நிமிடங்கள் 15 விநாடிகள் பாடி அசத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், ''சிவபெருமானை போற்றி பாடப்படும் அருட்பாடல்கள் 12 திருமுறைகளில், அதே போல, முருகப்பெருமானுக்கும் 12 திருமுறைகள் உண்டு. அது முருகவேல் பன்னிரு திருமுறை. முருகர் என்றாலே திருப்புகழ் என்று சொல்லப்படும் அளவுக்கு, 12 திருமுறைகள் இருக்கின்றன. சிவனடியார்களை போற்றும் பெரியபுராணம் இருப்பது போல, முருகப் பெருமானுக்கும் 12வது திருமுறையாக 'சேய் தொண்டர் புராணம்' உண்டு.
தற்போது இளைய தலைமுறையினர் பன்னிரு திருமுறை பயின்று வருவதில், அதிக ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சி. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது,'' என்றார்.

