ஏ.ஐ., புகைப்படங்களுக்கு கட்டுப்பாடு; ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வரவேற்பு
ஏ.ஐ., புகைப்படங்களுக்கு கட்டுப்பாடு; ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வரவேற்பு
UPDATED : ஜன 27, 2026 10:16 AM
ADDED : ஜன 27, 2026 10:18 AM

ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க, மத்திய அரசு விரைவில் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது. இதற்கு ஜோஹோ நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான ஸ்ரீதர் வேம்பு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
உலகம் முழுதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு புகைப்படத்தை வழங்கி, நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கும்படி, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு 'பிராம்ட்' எனப்படும் உத்தரவு பிறப்பித்தால் போதும், அடுத்த சில நிமிடங்களிலேயே எதிர்பார்த்த புகைப்படம் நம் கைக்கு கிடைத்து விடும்.
இந்த தொழில்நுட்பத்தை சிலர் தவறாகவும் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட , 'எக்ஸ்' வலைதளத்தில் உள்ள 'க்ராக்' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பெண்களின் ஆபாச படங்களை சிலர் பதிவிட்டனர்.
'க்ராக்' இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளிடம் இருந்து, எக்ஸ் வலைதள நிறுவனர் எலான் மஸ்க்குக்கு இது பற்றி புகார் அளிக்கப்பட்டது. 'க்ராக்' வழியாக நடக்கும் மோசடிகளை உடனடியாக தடுக்காவிட்டால், விபரீதம் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் புகைப்படங்கள் உண்மையானதா; செயற்கை நுண்ணறிவு மூலம் சித்தரிக்கப்பட்டதா என்பதை பயனாளர்களும், பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில், மத்திய அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வரவுள்ளது.
அதன்படி செயற்கை நுண்ணறிவு புகைப்படம் எனில், அதற்கான முத்திரையை, அதில் கட்டாயம் பதிய வேண்டும் என்ற விதி அமலாகவுள்ளது. இதனால், பொதுமக்களிடையே தவறான மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவது கட்டுப்படுத்தப்படும்.
செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களை பயன்படுத்துவதற்கான வரைவு விதிகள் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவசியம் தேவை
இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஜோஹோ நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான ஸ்ரீதர் வேம்பு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
தற்போதைய சூழலில் இந்த கட்டுப்பாடு அவசியம் தேவை. ஏனெனில், சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் சித்தரிக்கப்பட்ட அல்லது திரிக்கப்பட்ட புகைப்படங்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மத்திய அரசு கொண்டு வரவுள்ள விதிகளுக்கு வரவேற்பு அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
