வினாத்தாளை பார்த்து பதற்றப்படாதீர் புன்னகை செய்யுங்கள்: கவர்னர் ரவி அறிவுரை
வினாத்தாளை பார்த்து பதற்றப்படாதீர் புன்னகை செய்யுங்கள்: கவர்னர் ரவி அறிவுரை
UPDATED : பிப் 07, 2026 07:15 PM
ADDED : பிப் 07, 2026 07:17 PM
சென்னை:
“தேர்வு அறையில் வினாத்தாளை பார்த்ததும், பதற்றப்படாமல், புன்னகை செய்யுங்கள். அது உங்களுக்கு சரியான பதிலை கொடுக்க உதவும்,” என, கவர்னர் ரவி மாணவ, மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, பிரதமர் மோடி கலந்துரையாடும், 9ம் ஆண்டாக நடத்தப்படும் 'பரிக்ஷா பே சர்ச்சா' எனும் நிகழ்ச்சி, நாடு முழுதும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. சென்னை அடுத்த திருவேற்காடு, ஆர்.எம்.கே., பள்ளியில் நடந்த நிகழ்வில், தமிழக கவர்னர் ரவி பங்கேற்றார்.
பிரதமர் நிகழ்ச்சிக்கு பின், கவர்னர் ரவி, மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:
மாணவ, மாணவியருக்கு சுய ஒழுக்கம், நேர மேலாண்மை மிகவும் முக்கியம். இதை தான் பிரதமர் குறிப்பிட்டார். அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இதமான சூட்டில் 500 மி.லி., தண்ணீரை அருந்த வேண்டும். உடற்பயிற்சி, யோகா செய்ய வேண்டும்.
பயத்திலிருந்து வெளியே வர, அதனுடன் நாம் சண்டையிட வேண்டும். கடினமானப் பாடங்களை, தினமும் படிக்க வேண்டும். அப்போது தான், அது உங்களுக்கு சுலபமாக மாறும். வினாத்தாளை வாங்கியதும், தெரியாத கேள்வியை பார்த்து, பதற்றப்பட வேண்டாம். அது போன்ற சூழலில், புன்னகை செய்ய வேண்டும். அப்போது உங்கள் மூளையை எளிதாகப் பயன்படுத்தி, பதில்களைப் பெற முடியும். பதற்றம் ஏற்பட்டால், பதில் கிடைக்காது.
மாணவர்களுக்கு நான் அறிவியல் துறையை பரிந்துரைப்பேன். சாதனையாளர்களின் சுய சரிதையை படித்து, அதை ஊக்கமாக எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சி முடிவில், தேர்வை தைரியமாக எதிர்கொள்வது, எளிதாக கையாளுவது குறித்து, பிரதமர் மோடி எழுதிய, 'தேர்வு வீரர்கள்' என்ற புத்தகத்தை, கவர்னர் ரவி, மாணவர்களுக்கு வழங்கினார்.

