தேசிய இளைஞர் தின விளையாட்டு போட்டிகள் சாதித்த மாணவர்களுக்கு பரிசு
தேசிய இளைஞர் தின விளையாட்டு போட்டிகள் சாதித்த மாணவர்களுக்கு பரிசு
UPDATED : பிப் 16, 2026 01:20 PM
ADDED : பிப் 16, 2026 01:22 PM

ஊட்டி:
ஊட்டி ராமகிருஷ்ணா மடத்தில், சுவாமி விவேகானந்தரின், 163வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தேசிய இளைஞர் தின விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, 27 பள்ளிகளை சேர்ந்த, 800 மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில், பேச்சு போட்டி, ஓவிய போட்டி, வினாடி வினா மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ராமகிருஷ்ணா மடத் தலைவர் ராகவேஷனந்தா மகராஜ் தலைமையில் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சுவாமி சக்தி யுக்த்தானந்தா பேசுகையில், 'நாட்டில், எட்டு முதல், 30 வயது வரை இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களுக்கு, தனித்துவம் வாய்ந்த ஆளுமை, தலைமை பண்பு, ஒருங்கிணைத்தல், இளைஞர் மேம்பாட்டுக்கு வழிகாட்டுதல் போன்ற பயிற்சிகள் அவசியமாக உள்ளது. உலகளாவிய போட்டி திறன்களை வளர்த்துக் கொள்ள மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வது, விவேகானந்தரின் வழிகாட்டுதலின் அவசியமாகும்', என்றார்.
கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்வி நிறுவனத் தலைவர் முனைவர் சந்தியா, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், 'மாணவர்களின் எதிர்காலத்தை கல்வி மட்டும் நிர்ணயிப்பதில்லை. மாறாக, அவர்களின் சமூக சிந்தனையும், ஒழுக்கமான வாழ்வும் சேர்ந்து நிர்ணயிக்கிறது' என்றார்.
இதில், ஹில்போர்ட் பள்ளி தாளாளர் முனைவர் ரவிக்குமார் உட்பட, ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர். ஆசிரியர் நித்யாவதி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை, ராமகிருஷ்ணா மடம் செய்திருந்தது.
