பள்ளிக்கல்வி, உயர்கல்வி இயக்குநர் பணிகளுக்கு தமிழ் தெரிந்தவரை நியமிக்க கோரிக்கை
பள்ளிக்கல்வி, உயர்கல்வி இயக்குநர் பணிகளுக்கு தமிழ் தெரிந்தவரை நியமிக்க கோரிக்கை
UPDATED : ஏப் 21, 2026 07:03 PM
ADDED : ஏப் 21, 2026 07:04 PM
புதுச்சேரி:
பள்ளிக் கல்வி மற்றும் உயர்க்கல்வி துறைகளுக்கு தனி, தனியாக புதிய இயக்குநரையும், சென்டாக் நிர்வாகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை தமிழ்ப் பேச படிக்க தெரிந்தவர்களை மட்டுமே உடனடியாக நியமிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, கவர்னர், முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக பணிபுரிந்த சிவக்குமார், பதவி உயர்வு பெற்று லட்சத்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வி மற்றும் உயர்க்கல்வி துறைகளுக்கு தனி, தனியாக புதிய இயக்குநரையும், சென்டாக் நிர்வாகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை தமிழ்ப் பேச படிக்க தெரிந்தவர்களை மட்டுமே உடனடியாக நியமிக்க வேண்டும்.
காரணம், இத்துறைகளின் மூலம் அதிக அளவில் பாதிக்கப்படுவது படிப்பறிவு இல்லாத ஏழை கிராம மக்களே. இவர்கள், தங்கள் குறைகளை துறைகளின் இயக்குநர் மற்றும் செயலர்களிடம் நேரடியாக கூற வரும்போது தமிழ் படிக்க எழுத பேசத் தெரியாத அதிகாரிகள் இருப்பதால், அவர்கள் கூறும் புகார்களை சரியான முறையில் அதிகாரிகள் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையால் பிரச்னைகளுக்கு சரியான தீர்வு காண முடியவில்லை.
ஆகையால் மக்களின் குறைகளை உடனடியாக சரியான முறையில் தீர்வு காண தமிழ் பேச மற்றும் படிக்க எழுத தெரிந்தவர்களை மட்டுமே செயலர் மற்றும் இயக்குநர்களாக மேற்கண்ட துறைகளுக்கு நியமிக்க வேண்டும்.
மேலும், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாநில கல்வி வாரியம் மற்றும் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 1 சேர்க்கையும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை மருத்துவ படிப்பு, செவிலியர், சட்டப்படிப்பு மற்றும் கலை அறிவியல் போன்ற இளநிலை கல்வியும், உயர்கல்வி படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதுகலை கல்வியை கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் படிக்க மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கல்வித்துறை பெரிய நிர்வாகம் என்பதாலும் பணிச்சுமைகள் அதிக அளவில் உள்ளதாலும், பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை என்று தனியாக பிரித்து செயலாளர்கள் தனி தனியாக உள்ளதை போன்று இயக்குநரையும் தனித்தனியாக நியமிக்க வேண்டும்.
அதே போன்று சென்டாக் நிர்வாகம் மாணவர்கள் சேர்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கென்று தனியாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் மாணவர்களின் நலன் கருதி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் கடந்த ஆண்டு பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் சென்டாக் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஆகிய அனைத்து பொறுப்புகளையும் ஒருவரே பார்த்ததால் மாணவர்கள், பெற்றோர்கள் தங்களின் குறைகளை நேரடியாக சொல்ல முடியாமல் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே இப்பிரச்னையில் கவர்னர், முதல்வர் மற்றும் தலைமைச் செயலரும் ஒருங்கிணைந்து சரியாக முடிவெடுத்து உடனடியாக பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சென்டாக் நிர்வாகத்திற்கு தனி தனியாக தமிழ் பேசத் தெரிந்த இயக்குநர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

