தனியார் புத்தகங்களை வாங்க கட்டாயப்படுத்துவதா? சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எதிராக நோட்டீஸ்
தனியார் புத்தகங்களை வாங்க கட்டாயப்படுத்துவதா? சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எதிராக நோட்டீஸ்
UPDATED : ஏப் 23, 2026 10:41 PM
ADDED : ஏப் 23, 2026 10:45 PM

சட்ட விதிமுறைகளை மீறி, தனியார் பதிப்பாளர்களிடமிருந்து விலை உயர்ந்த பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு பரிந்துரைப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சகம், சி.பி.எஸ்.இ., மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கு, தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில், மலிவு விலையில் பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன.
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வெளியிடும் இந்த பாடப் புத்தகங்களை தான் மாணவர்கள் வாங்க வேண்டும் என விதிமுறைகள் உள்ளன.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றும் பல தனியார் பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி., தயாரித்த புத்தகங்களுக்கு பதிலாக, தனியார் பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களை வாங்கும்படி மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து விசாரிக்கும்படி, தேசிய மனித உரிமை கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் விபரம்:
தனியார் பதிப்பக புத்தகங்களை வாங்கும்படி கட்டாயப்படுத்துவது, பெரும்பாலான குடும்பங்கள் மீது மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. தனியார் பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்கள் மிக அதிக விலை கொண்டவையாக உள்ளன.
மேலும், அனைவருக்கும் சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி வாய்ப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட, 'தேசிய கல்வி கொள்கை 2020'ன் நோக்கங்களை, இந்த போக்கு சீர்குலைக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகார் மனுவை, தேசிய மனித உரிமை கமிஷன் உறுப்பினர் பிரியங்க் கனுாங்கோ தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது குறித்து, மத்திய கல்வித்துறை செயலர் மற்றும் அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்கள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

