குறைந்த செலவில் கிளைடு வெடிகுண்டு ஒடிஷாவில் நடந்த சோதனை வெற்றி
குறைந்த செலவில் கிளைடு வெடிகுண்டு ஒடிஷாவில் நடந்த சோதனை வெற்றி
UPDATED : மே 09, 2026 10:41 AM
ADDED : மே 09, 2026 10:42 AM
புதுடில்லி:
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட, 'தாரா' எனப்படும், புதிய 'கிளைடு' ஆயுத அமைப்பின் சோதனை ஒடிஷா கடற்கரையில் வெற்றிகரமாக நடந்தது.
டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய விமானப் படை இணைந்து, 'தாரா' ஆயுத அமைப்பின் முதல் வான்வழி சோதனையை ஒடிஷா கடற்கரையில் நேற்று வெற்றிகரமாக நடத்தின.
நம் நாட்டு விமான படையின் தற்காப்பு திறனை மேம்படுத்தும் வகையில், 'தாரா' ஆயுத அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆயுத அமைப்பு, குறைந்த செலவில் சாதாரண குண்டுகளை, வழிகாட்டப்பட்ட குண்டுகளாக மாற்றும், 'கிளைடு' தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் டி.ஆர்.டி.ஓ.,வால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
வான்வெளியில் ஏவப்படும் சாதாரண குண்டுகள் புவி ஈர்ப்பு விசையால் நேரடியாக கீழே விழும். இந்நிலையில், சாதாரண குண்டுகளுடன், 'கிளைடு' தொழில்நுட்பம் உள்ள, 'தாரா' ஆயுத அமைப்பை இணைத்துள்ளனர்.
இந்த இணைப்பு மூலம் குண்டுகள் இறக்கைகள் போன்ற அமைப்பின் உதவியுடன் காற்றில் மிதந்து, நீண்ட துாரம் சென்று தரையில் உள்ள இலக்கை துல்லியமாகவும், தீவிரமாகவும் தாக்கும்.
இந்த அமைப்பை ஒடிஷாவின் கடற்கரையில் நேற்று முன்தினம் விமானப் படை சோதித்தது. இதில், 'தாரா' அமைப்பு இணைக்கப்பட்ட வெடிகுண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சரியாக தாக்கி சாதனை படைத்தது. இதற்காக டி.ஆர்.டி.ஓ., மற்றும் விமானப் படைக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
