பாடத்திட்டத்தில் மனவளக் கலை சேர்க்க வேண்டும்: முதல்வரிடம் வலியுறுத்த திட்டம்
பாடத்திட்டத்தில் மனவளக் கலை சேர்க்க வேண்டும்: முதல்வரிடம் வலியுறுத்த திட்டம்
UPDATED : மே 11, 2026 08:39 PM
ADDED : மே 11, 2026 08:41 PM

திருப்பூர்:
'பள்ளி பாடத்திட்டத்தில் மன வளக்கலையை பாடமாகச் சேர்க்க முதல்வரைச் சந்தித்து கோரிக்கை விடுப்போம்' என்று உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன் கூறினார்.
உலக சமுதாய சேவா சங்கத்தின், கிராமிய சேவை திட்டத்தில், 400வது கிராமமாக, திருப்பூர் அடுத்த இடுவம்பாளையம் கிராமம் தத்தெடுக்கப்பட்டது. ராம்ராஜ் காட்டன் மற்றும் தி சென்னை சில்க்ஸ் ஆகிய நிறுவனங்கள், இத்திட்டத்தை இங்கு செயல்படுத்த உள்ளன.
இதன் துவக்க விழா, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. உலக சமுதாய சேவா சங்க மண்டல செயலாளர் பழனிசாமி வரவேற்றார். துணை தலைவர்கள் சுந்தரராஜன், ஆறுமுகம், நாகராஜன் பேசினர். கிராம சேவை திட்டம் குறித்து, இயக்குனர் முருகானந்தம் பேசினார்.
துணை தலைவர் சின்னசாமி, 'மாற்றத்தின் வலிமை வி.எஸ்.பி., 400' என்ற விழா மலரை வெளியிட்டார்; 'பிரித்வி' நிறுவன நிர்வாக இயக்குனர் பாலன் பெற்றுக்கொண்டார்.
உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன் பேசியதாவது:
மன அமைதிக்காக உலகளாவிய அறிஞர்கள் கூறிய வழியை, மிகவும் எளிதாக, வேதாத்திரி மகரிஷி வழங்கியுள்ளார். மன அமைதி என்பது பேசினால் கிடைப்பது அல்ல; உடல் நலனும் பேசினால் வராது; கவலையில்லாமல் வாழ வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகின்றனர். கவலையில்லாத நிலையை அடைய, மனவளக் கலை பயிற்சி அவசியம்.
பூரண மனநிறைவுடன் வாழ வேண்டுமெனில், ஆத்ம ஞானம், பிரம்ம ஞானம், ஞான யோக்கிதை பெற வேண்டும்; அதற்கு மனவளக்கலை மட்டுமே வழிகாட்டும். கெட்ட எண்ணங்களால் பாழான மனதை பக்குவப்படுத்த நாம் தான் முயற்சிக்க வேண்டும். அதற்கு மனவளக் கலை கற்க வேண்டும்; வேறு மார்க்கம் இல்லை.
தியானம் இல்லாமல் மன துாய்மையை பெறவே முடியாது. பயிற்சி இல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைக்க முடியாது. மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம், புத்தி ஆரோக்கியம் ஆகிய மூன்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
கூர்ந்து சிந்திக்கும் ஆற்றலை பெற முடியாமல் ஆன்மிக சாதனை படைக்க முடியாது. உயிருக்கு மதம், ஜாதி வேறுபாடு இல்லை; ஆண், பெண் பாகுபாடும் இல்லை. படித்தவர்கள் மட்டுமல்ல, பாமர மக்களும் பயன்பெறும் வகையில், மனிதன் உயர்ந்த நிலையை அடையும் பயிற்சியை, தன்னலமற்ற முறையில் மக்களுக்கு வழங்க வேண்டும்.
விரைவில், தமிழக முதல்வரை சந்தித்து பேசுவோம். பள்ளி குழந்தைகள் பயன்பெறும் வகையில், பாடத்திட்டத்தில் மனவளக் கலையை ஒரு பாடமாக சேர்க்க கோரிக்கை வைக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
