நீதிமன்றங்களில் ஏ.ஐ., பயன்பாடு: வரைவு விதிகளை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்
நீதிமன்றங்களில் ஏ.ஐ., பயன்பாடு: வரைவு விதிகளை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்
UPDATED : ஜூன் 05, 2026 11:55 AM
ADDED : ஜூன் 05, 2026 11:57 AM

புதுடில்லி:
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டு உள்ளது. வழக்கறிஞர்கள் மனுவை தயாரிக்க ஏ.ஐ., பயன்படுத்தலாம். ஆனால், அது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.
வரைவு விதிகளில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஏ.ஐ., பயன்படுத்தி சட்ட வரைவு ஆராய்ச்சி, மனுக்களை தயாரித்தல், மொழி பெயர்ப்பு, வழக்கை நிர்ணயிக்க ஏ.ஐ., பயன்படுத்தலாம். ஆனால், சட்டம், உண்மை மற்றும் நீதி தொடர்பான கேள்விகளை தீர்மானிக்கும் அதிகாரம் நீதிபதிகளிடம் மட்டுமே இருக்கும்.
எந்த தரப்பினர் அல்லது சட்ட பிரதிநிதிகள் எந்த ஆவணம், மனுக்களை உருவாக்க ஏ.ஐ., உதவியுடன் பயன்படுத்தினால், அதனை சமர்ப்பிக்கும் போது நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதனை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஏ.ஐ., அமைப்பு குறித்த விவரங்களை அறிய நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஏ.ஐ., உருவாக்கிய தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதனை பயன்படுத்திய விதம், செயல்படும் விதம் குறித்து கேட்க முடியும். பொய்யான அல்லது தவறான மனு தாக்கலுக்கு ஏ.ஐ., மீது குற்றம்சாட்ட மனுதாரர்கள் அல்லது வழக்கறிஞர்கள் பொறுப்பில் இருந்து விலக முடியாது.
ஏ.ஐ., பயன்படுத்தி உருவாக்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், மனுக்கள், ஆதாரங்கள் பொய்யானவை, புனையப்பட்டவை, தவறாக அல்லது போதிய தகவல் அளிக்காதவை என கண்டறியப்பட்டால், அதனை அளித்தவர்களே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
மேலும், அந்த நபருக்கு எதிராக தேவையான உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பிக்கலாம். இந்த விதிமுறைகள் சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்கள், கீழமை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களுக்கு பொருந்தும்
சுப்ரீம் கோர்ட் ஏ.ஐ., குழு தயாரித்த இந்த விதிமுறைகள் சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 20 வரை இது குறித்து தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.
