அறிவிப்பு பலகையில் கட்டண விபரம்: எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு
அறிவிப்பு பலகையில் கட்டண விபரம்: எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு
UPDATED : ஜூன் 05, 2026 12:11 PM
ADDED : ஜூன் 05, 2026 12:13 PM

சென்னை:
கல்வி கட்டணங்களை, பள்ளி அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என, தனியார் பள்ளிகளுக்கு மாநில தகவல் ஆணையம், தனியார் பள்ளிகள் இயக்குநரகம் ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச்செயலர் கே.பழனியப்பன் தாக்கல் செய்த மனு:
தமிழகம் முழுதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும், அரசு நிர்ணயித்த கல்வி கட்டண விபரங்களை, பள்ளி விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு, மாநில தகவல் ஆணையம், மே 25ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
சட்ட வரம்பு
அதன்படி, ஜூன் 5ம் தேதிக்குள் கட்டண விபரங்களை, விளம்பர பலகையில் வெளியிடும்படி, அனைத்து தனியார் பள்ளிகளுக்கு, தனியார் பள்ளிகள் துறை இயக்குநர் ஜூன் 1ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டார்.
தகவல் அறியும் உரிமை சட்டம், தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா என்பது ஆராயப்படவில்லை. தகவல் அறியும் சட்டத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் போது, ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிலைக்கத்தக்கதல்ல.
வெளிப்படையான சட்டப்பூர்வ விதிமுறை இல்லாத நிலையில், தனியார் சுயநிதி பள்ளிகளின் கட்டண கட்டமைப்பை வெளியிடுமாறு கட்டாயப்படுத்த, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை.
விசாரணை
மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., வாரிய அங்கீகாரம் பெற்ற பள்ளிகள், மாநில பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டவையா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
முன் அறிவிப்போ, விசாரணையோ இல்லாமல், நான்கு நாட்களுக்குள் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பது, இயற்கை நீதிக்கு முரணானது.
மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு அதிகார வரம்பு மீறல் என்பதால், அந்த உத்தரவையும், அதன் அடிப்படையில் தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த சுற்றறிக்கையையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
