காவலன் தோழன் திட்டம் மீண்டும் அமைக்க வழி பிறக்குமா?
காவலன் தோழன் திட்டம் மீண்டும் அமைக்க வழி பிறக்குமா?
UPDATED : ஜூன் 11, 2026 01:29 PM
ADDED : ஜூன் 11, 2026 01:31 PM
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் 2024 - 25 கல்வியாண்டில் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க காவலன் தோழன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் 2505 பள்ளி மாணவர்கள் நியமிக்கப்பட்டு போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிந்து தடுக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.
ஆனால் இது பாதியிலேயே கிடப்பில் போட்டுவிட்டனர். நேற்று முன்தினம் தமிழக அளவில் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் போதை புழக்கத்தை பள்ளிகளில் இருந்தே ஒழித்து கட்ட மீண்டும் காவலன் தோழன் போன்ற திட்டங்களை செயல்படுத்த புதிய அரசு நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயமாகி உள்ளது.
தமிழக அளவில் குட்கா, கஞ்சா, போதை பாக்குகள் பயன்பாடு பெரும் பிரச்னையாக இருக்கிறது. இது தற்போது படிக்கும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதால் கற்பித்தல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு ஒரு தலைமுறையின் படிப்பறிவே மந்தமாக்கப்படும் அபாயத்தை எட்டி உள்ளது.
இதை தடுக்க பள்ளிக் கல்வித்துறை, 2024 - 25ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் காவலன் தோழி, காவலன் தோழன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஒரு பள்ளிக்கு 15 மாணவர்கள் காவலன் தோழிகளாகவும், தோழர்களாகவும் நியமிக்கப்படுவர். அவர்கள் பள்ளி மாணவர்களில் யாரிடமாவது போதை பயன்பாடு இருந்தால், அதில் இருந்து அவர்கள் வெளிவர மறைமுகமாக உதவுவர். மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர்களை கண்டறிந்து அவர்களின் நடவடிக்கை குறித்து தலைமை ஆசிரியருக்கு தெரிவிப்பர்.
மாணவருக்கு தேவையான உளவியல் ஆலோசனை உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்து தரப்படும். 2024 கல்வியாண்டில் 167 பள்ளிகளில் 15 மாணவர்கள் என 2505 மாணவர்கள் காவலன் தோழி, தோழர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் இது அடுத்த கல்வியாண்டிலே பின்பற்றப்படாமல் போனது. அரசு, உதவிபெறும், தனியார் பள்ளிகளில் போதை எதிர்ப்பு அமைப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் இன்றளவும் முழுவீச்சில் செயல்பாட்டில் இல்லை.
நேற்று முன்தினம் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் துவங்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் பாதுகாப்பில் குந்தகம் ஏற்படுத்துவோரில் போதை ஆசாமிகளின் எண்ணிக்கையும் அதிகம் உண்டு. பள்ளி பருவத்தில் இருந்தே போதை புழக்கம் துவங்குவது நாளடைவில் அடிமையாக்கி மூளையை மழுங்கடிக்க செய்கிறது.
இன்னமும் பள்ளிகளுக்கு அருகே போதை வஸ்துக்கள் விற்பனை செய்வோரை கைது செய்வது ஆங்காங்கே நடந்து கொண்டு தான் வருகிறது. இளம் வயதில் அடிமையாவதால் எதிர்காலத்தை தொலைக்கும் அபாயம் ஏற்படுகிறது. இந்த திட்டத்தை பள்ளிக் கல்வித்துறையினர் மீண்டும் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். அடிக்கடி கண்காணிப்பு செய்து ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்தால் மட்டுமே மாணவர்கள் மத்தியில் போதை பரவும் கலாசாரம் முற்றிலும் தடுக்கப்பட வாய்ப்புள்ளது.
