உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயிற்சி விமானம் அங்குர்; இந்திய விமானப்படை வரவேற்பு
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயிற்சி விமானம் அங்குர்; இந்திய விமானப்படை வரவேற்பு
UPDATED : செப் 19, 2026 03:10 PM
ADDED : செப் 19, 2026 03:16 PM
புதுடில்லி:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'HTT - 40' அடிப்படை பயிற்சி விமானத்தை இந்திய விமானப்படை வரவேற்றுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில், இந்த விமானத்திற்கு 'அங்குர்' எனப் பெயரிடப்பட்டு விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட HTT - 40 என்ற அடிப்படை பயிற்சி விமானத்திற்கு இந்திய விமானப்படை அங்குர் என்று பெயரிட்டுள்ளது. பெங்களூருவில் நடந்த விழாவில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்த முதல் அங்குர் விமானம் இந்திய விமானப்படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தின் 70 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் கீழ், இந்த விமானங்களின் விநியோகம் தற்போது துவங்கியுள்ளது.
இந்திய விமானப்படையின் இளம் விமானிகளுக்கு அடிப்படைப் பயிற்சிகளை வழங்குவதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் நவீன கிளாஸ் காக்பிட் மேம்பட்ட ஏவியானிக்ஸ் சிஸ்டம் மற்றும் அவசர காலத்தில் விமானிகள் தப்பிக்க உதவும் 'ஜீரோ-ஜீரோ' எஜெக்ஷன் சீட்களைக் கொண்டுள்ளது. இந்த 'அங்குர்' விமானத்தின் வருகை, பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெற்ற சுயசார்பு கொண்ட இந்தியாவின் இலக்கை நோக்கிய ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இது குறித்து இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கை:
இந்திய விமானப்படை HTT - 40 'அங்குர்'ஐ வரவேற்கிறது. 'அங்குர்' என்று பெயரிடப்பட்ட HTT - 40 அடிப்படைப் பயிற்சி விமானம், இந்திய விமானப்படையில் இணைவதன் மூலம், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெற்ற சயசார்பு கொண்ட இந்தியாவை நோக்கிய பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த HTT - 40 விமானத்தின் வருகையானது, உள்நாட்டுப் பாதுகாப்பு விமானத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. 'அங்குர்' நமது எதிர்கால விமானிகளின் திறன்களை மேம்படுத்தும்.
இவ்வாறு இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
