ஜாமியா பல்கலையின் நிறுவன நாள் விழா மாணவர்களின் போராட்டங்களால் ரத்து
ஜாமியா பல்கலையின் நிறுவன நாள் விழா மாணவர்களின் போராட்டங்களால் ரத்து
UPDATED : அக் 23, 2026 03:10 PM
ADDED : அக் 23, 2026 03:11 PM
புதுடில்லி:
மாணவர் சங்கத்தை மீண்டும் அமைக்ககோரி, வளாகத்தில் நடந்து வரும் தொடர் போராட்டங்களை அடுத்து, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் 106வது நிறுவன நாள் விழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த பல்கலைக்கழகத்தில் 2006ம் ஆண்டு முதல் மாணவர் சங்கத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த பத்து நாட்களாக மாணவர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு, டாக்டர் ஜாகிர் உசேன் நுாலகம் மற்றும் பழைய நுாலகம் ஆகியவற்றை பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு நாள் மூடியது. போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தி, அவர்களின் குறைகளை கேட்டறிய உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டது.
பேச்சின் அடிப்படையில், மாணவர் சங்கத்திற்கான அரசியலமைப்பை வரைவு செய்ய ஐந்து பேர் கொண்ட குழுவை அமைப்பதாக, பல்கலைக்கழகம் அறிவித்தது.
அக்., 12 முதல் 21ம் தேதி வரை நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதை ஏற்க மறுத்து, போராட்டத்துடன் தொடர்புடைய அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் எழுத்துப்பூர்வமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தலைமைப் காப்பாளர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், ஜாமியா பல்கலைகக்கழகத்தின் 106வது நிறுவன நாள் விழா வருகிறது. பல்கலைக்கழகத்தின் கலாச்சார மற்றும் கல்வி பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நோக்கில், 'தலிமி மேளா' என்று பெயரிடப்பட்ட இந்தக் கொண்டாட்டங்கள், பல்கலைக்கழக வளாகத்தில் அக்., 29 முதல் நவ., 1 வரை நடப்பதாக இருந்தன.
“போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் சமரச தீர்வுக்கு இன்னும் உடன்படவில்லை. மேலும் பல்ககைக்கழக வளாகத்தில் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள், விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை முதன்மையாகக் கருதி, 'தலிமி மேளா' விழாவை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று, ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர் நலத்துறை டீன் அறிவித்துள்ளார்.
