சென்னை, மதுரை காமராஜ் பல்கலை இணைந்து ஆய்வு நடத்த ஒப்பந்தம்
சென்னை, மதுரை காமராஜ் பல்கலை இணைந்து ஆய்வு நடத்த ஒப்பந்தம்
UPDATED : ஜன 20, 2011 12:00 AM
ADDED : ஜன 20, 2011 03:06 PM
மதுரை: சென்னை மற்றும் மதுரை காமராஜ் பல்கலைகள், உயிரியல் துறையில் இணைந்து ஆய்வுகள் நடத்துவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளன.
இதன் மூலம், இரு பல்கலைகளும் இத்துறையில் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றை பரிமாறிக்கொள்ளும். கருத்தரங்கங்கள், பயிற்சிப் பட்டறைகளால் இரு பல்கலை ஆய்வு மாணவர்களும் ஆய்வுகளை பகிர்ந்து கொள்வர். பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் கோடை பயிற்சி நடத்தப்படும்.
இதற்காக, இரு பல்கலைகளிலும் ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இவை, தன்னாட்சி அந்தஸ்து பெற்று செயல்படும். இதற்காக இரு பல்கலைகளும் வைப்பு நிதியாக, தலா, 50 லட்சம் ரூபாய் ஒதுக்குகின்றன.
முதற்கட்டமாக இரு பல்கலைகளும், தலா, ஐந்து லட்சம் ரூபாயில் திட்ட பணிகளை மேற்கொள்ளும். இதற்கான மையமும், நிர்வாக அலுவலகங்களும் அந்தந்த பல்கலைகளில் கட்டப்படும். இத்திட்டம் குறித்து, சென்னை பல்கலையில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மதுரை காமராஜ் பல்கலை துணை வேந்தர் கற்பககுமாரவேல், சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் மற்றும் பல்கலைகளின் ஆறு துறைத்தலைவர்களும் பங்கேற்றனர்.
சென்னை பல்கலையின் தொடர்பு அலுவலராக ஸ்ரீமன் நாராயணன், மதுரை காமராஜ் பல்கலை தொடர்பு அலுவலராக குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
