தமிழக போலீஸ் பயிற்சியில் புதிய பாடத்திட்டம்: கூடுதல் டி.ஜி.பி., தகவல்
தமிழக போலீஸ் பயிற்சியில் புதிய பாடத்திட்டம்: கூடுதல் டி.ஜி.பி., தகவல்
UPDATED : பிப் 02, 2011 12:00 AM
ADDED : பிப் 02, 2011 02:53 PM
சென்னை: “தேசிய போலீஸ் அகடமியின் பரிந்துரைகளுடன், தமிழக போலீசாருக்கான பயிற்சிக்கு புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,” என, போலீஸ் பயிற்சித்துறை கூடுதல் டி.ஜி.பி., சேகர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள, 1095 சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு நடந்து முடிந்தது. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான ஓராண்டு பயிற்சி நேற்று துவங்கியது. சென்னை, வண்டலூரில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகடமியில் தாலுகா எஸ்.ஐ.,க்கள் 810 பேருக்கும், அசோக்நகரில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளியில், ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை எஸ்.ஐ.,க்கள், 83 பெண்கள் உள்ளிட்ட 285 பேருக்கும், பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு போலீஸ் அகடமியில் இந்த பயிற்சியை அகடமியின் தலைவரும், கூடுதல் டி.ஜி.பி.,யுமான அனுõப் ஜெய்ஸ்வாலும், அசோக்நகர் பயிற்சிப் பள்ளியில், பயிற்சித்துறை கூடுதல் டி.ஜி.பி., சேகரும் துவக்கி வைத்தனர்.
கூடுதல் டி.ஜி.பி., சேகர் கூறியதாவது:
எஸ்.ஐ., பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில், 315 பேர் பெண்கள். இவர்களுக்கு ஓராண்டு பயிற்சி முடிவில், காவல் நிலையங்களில் செய்முறை களப்பயிற்சி வழங்கப்படும். இது தவிர, தேர்வாணயம் மூலம், 9,027 போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 2,655 பெண்களும் அடங்குவர்.
இவர்களுக்கான பயிற்சி, கடந்த திங்கள் முதல் அசோக்நகர், ஆவடி உள்ளிட்ட, தமிழகத்தில் 34 இடங்களில் துவக்கப்பட்டுள்ளது. அசோக்நகர் பயிற்சிப் பள்ளியில் எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசாருக்கான பயிற்சிகள் ஒரே நேரத்தில் வழங்கப்படுவது முதல் முறை. பயிற்சி பெறும் போலீசில், 102 பேர், காவலர்களின் வாரிசுகள். கடந்தாண்டில், 4000 போலீசார் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கான பயிற்சி காலம் 22 வாரங்கள்.
இதில், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் உள்ளிட்டவற்றுடன், மனித உரிமை மீறல், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், மாற்றுத் திறனாளிகளை அணுகுவது உள்ளிட்டவை குறித்தும் பயிற்சியளிக்கப்படுகிறது. இது தவிர, கவாத்து,யோகா, நீச்சல், ஆயுதங்களை கையாளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. சமீபத்தில், தேசிய போலீஸ் அகடமி, போலீசாருக்கான பயிற்சி நாடுமுழுவதும் ஒரே மாதிரியாக வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இதில், தமிழக போலீசாருக்கு தேவையானவற்றை மட்டும் சேர்த்து, புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இதன் படி இந்தாண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. தற்போது எஸ்.ஐ.,க்களுக்கு, தடயவியல் மற்றும் சைபர் கிரைம் தொடர்பான பயிற்சிகள் மற்றும் வனப்பகுதியிலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
போலீசார் மற்றும் எஸ்.ஐ., தேர்வுகளில் பெண்களுக்கு உரிய ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதிகளவில் பெண்களும் ஆர்வத்துடன் வந்து சேர்கின்றனர். இவ்வாறு சேகர் கூறினார்.
