பள்ளிகள் தரம் உயர்த்துவதில் தாமதம்: கட்டமைப்பு வசதி செய்வதில் சிக்கல்
பள்ளிகள் தரம் உயர்த்துவதில் தாமதம்: கட்டமைப்பு வசதி செய்வதில் சிக்கல்
UPDATED : மார் 14, 2011 12:00 AM
ADDED : மார் 14, 2011 11:44 AM
விருதுநகர்: தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் (ஆர்.எம்.எஸ்.ஏ) திட்டத்தின் கீழ் 344 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியது தாமதத்தால் கட்டமைப்பு வசதிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் அனைவருக்கும் இடை நிலைக்கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014 ம் ஆண்டுக்குள் 14 வயது நிரம்பிய அனைவருக்கும் இடைநிலைக்கல்வி வழங்க வேண்டும். 2020 ல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் மேல் நிலைக்கல்வி வழங்க வேண்டும் என்ற குறிக் கோளுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2010-11 ம் கல்வியாண்டில் முன் கூட்டியே நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது தான் தமிழகத்தில் 344 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் 7 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு உடற்கல்வி ஆசிரியர் உட்பட 2,752 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
344 பள்ளி ஆய்வகங்களுக்கு அலுவலக பணியாளர்களில் பதவி உயர்வு மூலம் நியமிக்கவும், 344 இள நிலை உதவியாளர்கள் டி.என்.பி. எஸ்.சி., மூலம் தேர்வு செய்து நியமிக்கப்படவுள்ளனர். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உயர்நிலை பள்ளிக்கு மூன்று ஏக்கர் நிலம் கட்டாயமாக இருக்க வேண்டும். கட்டடம், ஆய்வக வசதி, சேர், டேபிள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும்.
மத்திய அரசின் நிதி பரிந்துரைக்கு பின்னர் தான் பணி நியமனம், கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும். தமிழகத்தில் தேர்தல் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் தான் இந்த பணிகள் துவங்கும் என்பதால் ஜூன் மாதத்தில் தான் செய்யமுடியும்.
கால தாமதம் காரணமாக 2011-12 ம் கல்வியாண்டில் கூட பள்ளிகளில் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு மாணவர்களை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி வரும் ஆண்டுகளிலாவது பள்ளிகள் கல்வியாண்டின் துவக்கத்தில் தரம் உயர்த்தப்பட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன் வர வேண்டும்.
