முதுநிலை மருத்துவ படிப்பில் அரசுக்கு இட ஒதுக்கீடு பெற வலியுறுத்தல்
முதுநிலை மருத்துவ படிப்பில் அரசுக்கு இட ஒதுக்கீடு பெற வலியுறுத்தல்
UPDATED : மே 03, 2011 12:00 AM
ADDED : மே 03, 2011 09:56 AM
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் 50 சதவீத இடங்களை அரசுக்கு தர வேண்டும், என்று புதுச்சேரி அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது : தனியார் மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடங்கள் அரசுக்கு பெறப்படும் என்று முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில் அறிவிப்பது வாடிக்கையாக உள்ளது. அதேசமயம், 50 சதவீதத்துக்கு பதிலாக, 22ல் இருந்து 35 சதவீதம் வரையிலான இடங்களை, ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொருவிதமாக மனம் போன போக்கில் குறைத்து பெறுவதும் தொடர்கதையாக உள்ளது.
இது, அரசுக்கும், மருத்துவக் கல்லூரிகளுக்கும் இடையில் வியாபாரம்போல பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால், படித்த கிராமப்புற இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மேல்படிப்புகளில், ஒரு இடத்தைகூட அரசு ஒதுக்கீட்டிற்கு பெறவில்லை.
இங்குள்ள 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகள் 130, டிப்ளமோ படிப்புகள் 23 என மொத்தம் 153 இடங்கள் உள்ளன. 50 சதவீத இடங்களை அரசுக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மருத்துவ முதுநிலை படிப்புகளில் இட ஒதுக்கீடு தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர், 50 சதவீத இட ஒதுக்கீட்டை நிச்சயமாக கேட்டு பெறுவோம், வழங்காவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீட்டை பெற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தற்போது கேட்கின்றனர். அரசு மவுனமாக உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக யாரிடம் முறையிடுவது என்றும் தெரியவில்லை. கவர்னரிடம் முறையிட விரும்பவில்லை. எனவே, உள்துறை அமைச்சகம், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு கடிதம் எழுத உள்ளோம். இந்த பிரச்னையில் சுகாதார அமைச்சரின் பதில் என்ன? கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் டில்லிக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்து முறையிட உள்ளோம். இவ்வாறு அன்பழகன் கூறினார்.
