கிறிஸ்துவ சினிமாவுக்கு மாணவர்களை கூட்டி சென்ற தனியார் பள்ளிக்கு 'நோட்டீஸ்'
கிறிஸ்துவ சினிமாவுக்கு மாணவர்களை கூட்டி சென்ற தனியார் பள்ளிக்கு 'நோட்டீஸ்'
UPDATED : நவ 26, 2025 07:11 AM
ADDED : நவ 26, 2025 07:12 AM
வேலுார்:
பள்ளி மாணவர்களை கிறிஸ்துவ மதம் சார்ந்த படத்திற்கு அழைத்துச் சென்ற விவகாரத்தில், தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு, விளக்கம் கேட்டு, பள்ளிக்கல்வி துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கிறிஸ்துவ கன்னியாஸ்திரியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும், பேஸ் ஆப் பேஸ்லெஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் சிறப்பு காட்சி, வேலுார் மாவட்டம், காட்பாடியில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது.
இதை பார்க்க, காட்பாடி தனியார் கிறிஸ்துவ பள்ளி, கல்லுாரி மாணவர்களை, அந்த நிர்வாகம் கட்டாயப்படுத்தி அழைத்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, பாதிரியார் ஒருவர் பள்ளி மாணவர்களை, காட்பாடி திரையரங்கிற்குள் அழைத்துச் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, சர்ச்சையானது.
இதற்கு ஹிந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்தனர். நம் நாளிதழில், நவ., 23ம் தேதி இது குறித்து படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு, மாவட்ட கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா கூறுகையில், ''கல்வித்துறையிடம் அனுமதி பெறாமல், மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் திரையரங்கிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
''இந்த விவகாரம் தொடர்பாக, தனியார் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர்கள் விளக்கம் அளித்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

