வேளாண் பொறியியல் கல்லுாரியின் துறைகளை மாற்ற கடும் எதிர்ப்பு
வேளாண் பொறியியல் கல்லுாரியின் துறைகளை மாற்ற கடும் எதிர்ப்பு
UPDATED : அக் 26, 2014 12:00 AM
ADDED : அக் 26, 2014 12:35 PM
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் பொறியியல் கல்லுாரியின், மிக முக்கியமான பண்ணை இயந்திரவியல் துறை மற்றும் மண் மற்றும் நீர் பாதுகாப்புத்துறை ஆகிய இரண்டையும், திருச்சிக்கு மாற்ற, பல்கலை மேலாண்மைக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை - மருதமலை ரோட்டிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை நுாற்றாண்டுகளை கடந்தது. கோவையில் உள்ள சீதோஷ்ண நிலை தட்பவெப்பம் ஆகியவை வேளாண் ஆராய்ச்சிகளுக்கு உகந்த சூழலாக கருதப்பட்டதால், விவசாயக் கல்லுாரி, பல்கலைக்கழகமாக 1971ல் உயர்ந்தது. வேளாண் பல்கலை நிர்வாக அமைப்பில், அதன் மேலாண்மைக்குழு முக்கிய பங்கு வகிக்கிறது.
இக்குழு எடுத்த முடிவின்படி, பல்கலை நிர்வாகம் வேளாண் பொறியியல் கல்லுாரியின் கீழ் இயங்கும் பண்ணை இயந்திரவியல் துறை மண் மற்றும் நீர் பாதுகாப்புத் துறைகளை, திருச்சி குமுளூரிலுள்ள வேளாண் பொறியியல் கல்லுாரிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
வேளாண் பொறியியல் கல்லுாரியின் கீழ் பண்ணை இயந்திரவியல் துறை, நீர் பாதுகாப்புத்துறை, இயற்கை சக்தித்துறை உணவு மற்றும் வேளாண் பதன் செய்துறை அறுவடை பின்சார் தொழில்நுட்பத்துறை, வேளாண் இயந்திரங்கள் ஆராய்ச்சித்துறை, இயற்பியல் அறிவியல்துறை என ஏழு துறைகள் உள்ளன. இதில் பண்ணை இயந்திரவியல் துறை, மண் மற்றும் நீர் பாதுகாப்புத்துறை மிகவும் முக்கியமானவை.
இந்த உத்தரவால் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்விரண்டு துறைகளை மாற்றக்கூடாது என்று விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் வேளாண் பல்கலை துணைவேந்தரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் நிர்வாக காரணங்கள் மற்றும் கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில், இவ்விரு துறைகளும் மாற்றப்படுவதாக பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்ட விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
விவசாயிகளுக்கு பெரும் இழப்பு
தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவியல் ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினரும், விவசாயியுமான காளிச்சாமி கூறுகையில், "வேளாண் பொறியியல் கல்லுாரிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் நோக்கில் இரு துறைகளையும் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, வேளாண் பொறியியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி விரிவாக்கம் போன்ற பணிகளுக்கு இந்த மாற்றம் முட்டுக்கட்டையாக உள்ளது.
இப்பல்கலை 40 ஆண்டுகளாக, பல வேளாண் வல்லுனர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கியுள்ளது. இத்துறைகளை மாற்றுவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். அதனால் இந்த மாற்றத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகளுக்கு நியாயம் வழங்க வேண்டும்" என்றார்.

