புவிசார் குறியீடு கிடைத்தும் விற்பனை கொள்முதல் மையம் இல்லை
புவிசார் குறியீடு கிடைத்தும் விற்பனை கொள்முதல் மையம் இல்லை
UPDATED : பிப் 09, 2024 12:00 AM
ADDED : பிப் 09, 2024 10:09 AM
மதுரை:
கொடைக்கானல் மேல்மலை பூண்டு உலகில் உள்ள மிகச்சிறந்த பூண்டு வகைகளில் தரத்தில் முதலிடம் பெற்று புவிசார் குறியீடு பெற்ற நிலையிலும் விவசாயிகளுக்கான தேவைகளையும் ஆராய்ச்சிகளையும் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மேல்மலை கிராமங்களான மன்னவனுார், பூண்டி, கூக்கால், பூம்பாறை, வில்பட்டி கிராமங்களில் ஐப்பசி, வைகாசியில் தலா 3000 ஏக்கர் பரப்பளவில் மலைப்பூண்டு சாகுபடி ஆகிறது.உலகில் உள்ள 750 க்கும் மேற்பட்ட பூண்டு வகைகளில் தனித்துவம் பெற்ற முதன்மையான இந்த ரகத்திற்கு அரசின் கவனிப்பும், கண்காணிப்பும் இல்லை என கொடைக்கானல் மலைப்பயிர்கள் சங்க தலைவர் அசோகன், விவசாயிகள் விவேக், தன முருகன் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:
அதிக மழை, அதிகப்பனி, அதிக வெயில் காலங்களில் பயிர்கள் கருகும் போது அதற்கு ஏற்ற தொழில்நுட்ப ஆலோசனைகள் கிடைப்பதில்லை. புதிய நோய்களுக்கு ஏற்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.இந்த பூண்டின் முக்கியத்துவத்தை கருதியாவது இங்கு உள்ள விவசாயிகளின் தேவையை அறிந்து அதற்கான திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.இங்கு அரசு விதைப் பண்ணை அமைக்க வேண்டும். தற்போது பூண்டு கிலோ 500 வரை விற்பதால் இவற்றை வாங்கி சாகுபடி செய்வது இயலாத விஷயம். அரசு மானிய விலையில் விதை தரும் போது விவசாயிகள் சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரிக்கும்.கிடப்பில் திட்டம்6000 ஏக்கரில் சாகுபடி செய்து நான்கு மாதங்களில் விளைவித்தாலும் இங்கு விற்பனை மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. எல்லா காய்கறிகளுக்கும் மாற்று சந்தை உள்ளது. பூண்டு விற்பனைக்கு வடுகபட்டியை விட்டால் எங்களுக்கு வேறு வழியே இல்லை.சந்தைப்படுத்துதலில் பழைய நடைமுறையான கமிஷனை வியாபாரிகள் நிர்ணயிப்பதால் பூண்டு நல்ல விளைச்சல் கண்டாலும் விவசாயிகளால் அதன் பலனை அனுபவிக்க முடியவில்லை. எனவே அரசே பூண்டு கொள்முதல் மையத்தை அமைக்க வேண்டும்.மலைப்பிரதேச பயிர்கள் பயிற்சி நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க கொடைக்கானலில் 50 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அந்தத் திட்டம் கிடப்பில் உள்ளது.அதனை உடனே செயல்படுத்த வேண்டும் என்றனர்.