UPDATED : பிப் 20, 2024 12:00 AM
ADDED : பிப் 20, 2024 10:15 AM
திருப்பூர்:
ஜெர்மனியின் பாடிலேண்ட் பின்னலாடை விற்பனை நிறுவனத்தினர், நிப்ட்-டீ கல்லுாரியை பார்வையிட்டு, பாராட்டியுள்ளனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இணைந்து, ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி அளிக்கும், நிப்ட்-டீ கல்லுாரியை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக பாடத்திட்டங்களுடன், முழு நேர கல்லுாரியாக இயங்கி வருகிறது.வர்த்தக ரீதியாக திருப்பூர் வரும், வெளிநாட்டு வர்த்தகர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், நிப்ட்-டீ கல்லுாரியை கேள்விப்பட்டு, கல்லுாரியை பார்வையிடுவது வழக்கம். ஜெர்மனியை சேர்ந்த, பாடிலேண்ட் என்ற பின்னலாடை விற்பனை நிறுவனம், திருப்பூருடன் நீண்டநாள் தொடர்புடையது.அந்நிறுவனத்தை சேர்ந்த, எட்டு பேர் அடங்கிய குழு, நேற்று, நிப்ட்- டீ கல்லுாரியை பார்வையிட்டது. கல்லுாரியின் பாடத்திட்டம், ஆடை வடிவமைப்பு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.கல்லுாரி ஆய்வகம், அடல் இன்குபேஷன் மையம், க்ரோஸ் பெக்கர்ட் பயிற்சி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு, மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினர்.ஒரு மாணவரின் படிப்பு செலவு ஏற்க உறுதி
கல்லுாரி நிர்வாகிகள் கூறுகையில், கல்லுாரி வளாகத்தையும், ஆய்வகங்களையும், ஜெர்மனி வர்த்தக குழுவினர் பார்வையிட்டனர். சமூக வளர்ச்சியில், நிப்ட்-டீ கல்லுாரியில் முயற்சிகளை பாராட்டினர்.இவ்வர்த்தக குழுவினர், கல்லுாரி அமைத்த போது, ஒரு வகுப்பறைக்கான செலவை ஏற்றுக்கொண்டது பெருமையான விஷயம். இந்த குழுவினர், ஒரு மாணவரின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்பதாக உறுதி அளித்துள்ளனர், என்றனர்.