ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அமைச்சர் மது பங்காரப்பா உறுதி
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அமைச்சர் மது பங்காரப்பா உறுதி
UPDATED : பிப் 21, 2024 12:00 AM
ADDED : பிப் 21, 2024 09:50 AM
பெங்களூரு:
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க, உயர்நிலைப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.சட்டமேலவை கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் மரிதிப்பேகவுடா கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது:
அரசுப் பள்ளிகளுடன், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். உயர்நீதிமன்றத்தில் தடையுத்தரவு உள்ளதால், ஆசிரியர் நியமனம் தாமதமாகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக, நியமிக்கப்படவில்லை. தடையுத்தரவை நீக்குவது தொடர்பாக, அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.முதல்வருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் ஆசிரியர்கள் நியமனம் துவங்குவோம். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு, ஊழியர்களை நியமிப்பது தொடர்பாக, நிதித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ., - சங்கனுரா:
ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், மாணவர்களின் கல்விக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வேண்டுமானால் அவர்களின் ஊதியத்தில், 50 சதவீதம் பிடித்தம் செய்யுங்கள்.நிதித்துறை அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை, ஏன் நிரப்பவில்லை. இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும். உயர்நீதிமன்றம் கூறிய பின்னும் நியமிக்கவில்லை. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் மதிப்பு இல்லையா?அமைச்சர் மதுபங்காரப்பா:
ஆசிரியர்கள் பணியிடங்களை விரைந்து நியமிக்க, நான் ஆர்வமாக இருக்கிறேன். நீதிமன்றத்தின் உத்தரவு மூலமாகவே, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதில் நாங்கள் தலையிடமாட்டோம். ஊதியத்தில் பிடித்தம் செய்து, ஆசிரியர்களுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.