UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 04:03 PM
சென்னை:
கூட்டுறவு துறையில், இ - ஆபிஸ் எனப்படும், அனைத்து கோப்புகளும் கணினி வாயிலாக கையாளும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. அவைகளுக்கு கீழ் மாவட்ட அளவில், மண்டல இணை பதிவாளர் அலுவலகங்களும், அதற்கு கீழ் துணை பதிவாளர் அலுவலகங்களும் செயல்படுகின்றன.
பணியாளர்கள் பதவி உயர்வு, இடமாறுதல், பொருட்கள் கொள்முதல் என, துறையில் நடக்கும் அனைத்து பணிகளும் காகித கோப்புகள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், கோப்புகள் மாயமாவது உள்ளிட்ட தவறுகள் நடப்பதாக புகார்கள் எழுகின்றன.
இதை தடுக்க, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், மண்டல இணை பதிவாளர்கள் அலுவலகம், துணை பதிவாளர்கள் அலுவலகங்களில், இ - ஆபிஸ் எனப்படும் அனைத்து கோப்புகளும், கணினி வாயிலாக கையாளும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக, 350க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு, தமிழக மின் ஆளுமை முகமை வாயிலாக, கடந்த மாதம், 18ம் தேதி முதல், 25ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.