மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கம்: ஆதரவும்...! எதிர்ப்பும்....!
மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கம்: ஆதரவும்...! எதிர்ப்பும்....!
UPDATED : ஏப் 24, 2024 12:00 AM
ADDED : ஏப் 24, 2024 05:32 PM

கோல்கட்டா:
மேற்கு வங்கத்தில் 26 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கப்பட்ட உத்தரவிற்கு முதல்வர் மம்தா மற்றும் ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், பணம் கொடுத்து குறுக்கு வழியில் அரசு பணிகளில் சேர்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனக்கூறி உள்ளார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, 2016ல் தேர்வு நடத்தப்பட்டது. மாநில ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
26 ஆயிரம் பணி நீக்கம்
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'சட்டவிரோதமாகவும், மோசடியாகவும் நடைபெற்றதால், மேற்கு வங்க அரசால், 2016ல் நடத்தப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு செல்லாது. முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 26,000 பேர், இதுவரை பெற்ற சம்பளத்தை, 12 சதவீத வட்டியுடன் திருப்பி தர வேண்டும்' என உத்தரவிட்டது.
ஆசிரியர் நியமன தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பும், ஆதரவும் வலுத்து வருகிறது.
யாரெல்லாம் எதிர்ப்பு?
இது குறித்து ஆசிரியர் சங்கங்கள் கூறியதாவது:
ஆசிரியர்கள் வேலையை இழந்துள்ளனர். வட்டியுடன் சம்பளத்தை திரும்பிச் செலுத்துதல் ஆகியவை ஏற்புடையதல்ல. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனிதாபிமானத்துடன் உத்தரவு பிறப்பித்து இருக்க வேண்டும் எனத் தெரிவித்து உள்ளன.
சட்ட விரோதம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
நீதித்துறையில் பா.ஜ., தலைவர்கள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்துகின்றனர். ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செயல்முறையை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது சட்ட விரோதமானது. வேலை இழந்தவர்களுக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்கிறோம். அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
சம்பளத்தை திருப்பி கேட்பதா?
அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் கூறியதாவது:
முறைகேடு அடிப்படையில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டாலும், ஊதியத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்தக் கூறுவது சரியல்ல.அவர்கள் செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பளத்தை திருப்பி கொடுக்க சொல்வதை ஏற்க முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆதரவு
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கூறியதாவது:
அரசு பணிகளில் ஊழல் என்பது புதிது அல்ல. முறைகேடான வழியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் நியமனம் செல்லாது என நீதிபதிகள் துணிச்சலாக அனைவரையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். குறுக்கு வழியில் சட்டவிரோதமாக பணியில் சேர்பவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என சட்டப்பூர்வமாக உரிமை கோர முடியாது.
முறைகேடுகள்
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற முறைகேடுகள் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பணம் கொடுத்து குறுக்கு வழியில் அரசு பணிகளில் சேர்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.