தொடக்க கல்வியை நிறைவு செய்த மாணவர்கள்: கவுரவித்த ஆசிரியர்கள்
தொடக்க கல்வியை நிறைவு செய்த மாணவர்கள்: கவுரவித்த ஆசிரியர்கள்
UPDATED : ஏப் 30, 2024 12:00 AM
ADDED : ஏப் 30, 2024 09:11 AM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மரியாதை செய்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கியும், மேள, தாளம், தாரை, தப்பட்டை அடித்து வரவேற்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தாரை, தப்பட்டை இசைத்து வீட்டில் விட்டனர்.
ஆலாங்கடவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு வரை, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.பள்ளியில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஒன்றாம் வகுப்பு சேர்ந்த ஐந்து மாணவர்களை வீடு தேடிச் சென்று பள்ளி ஆசிரியர்கள், கல்வி உபகரணங்களை வழங்கி, தாரை, தப்பட்டை அடித்து மாலை அணிவித்து அழைத்து வந்தனர்.
இந்நிலையில், ஐந்தாம் வகுப்பு முடித்த அந்த மாணவர்களை அதே மரியாதையுடன் வழியனுப்பி வைக்க ஆசிரியர்கள் முடிவெடுத்தனர். அப்போது, பள்ளியில் சேர்ந்த, ஐந்து மாணவர்கள் மற்றும் அதன்பின் சேர்ந்த மாணவர்கள் என மொத்தம், 10 பேரை வழியனுப்பும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி, உதவிஆசிரியர் சிவராம் ஆனந்த் ஆகியோர், மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து, பள்ளியில் இருந்து, தாரை, தப்பட்டை இசைத்து, ஊர்வலமாக அழைத்துச் சென்று வீட்டில் விட்டனர். அரசுப்பள்ளியில் சேர்த்தற்காக பெற்றோருக்கு நன்றி தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
பள்ளிக்கு வரும் போது அளித்த மரியாதை, அவர்கள் கல்வி பயின்று வீட்டிற்கு செல்லும் போது வழங்க வேண்டும் என இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. உயர்நிலை, மேல்நிலை கல்வியை நன்றாக பயின்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்த்த பெற்றோருக்கு நன்றி தெரிவித்தோம். தொடர்ந்து, இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இவ்வாறு, கூறினர்.