சேவையாற்றும் இளைஞர்களுக்கு தமிழக அரசு விருது பெற அழைப்பு
சேவையாற்றும் இளைஞர்களுக்கு தமிழக அரசு விருது பெற அழைப்பு
UPDATED : மே 01, 2024 12:00 AM
ADDED : மே 01, 2024 10:51 AM

கோவை:
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, 15 முதல், 35 வயது வரையுள்ள, 3 ஆண்கள் மற்றும், 3 பெண்களுக்கு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
நடப்பாண்டுக்கான விருது, ஆக., 15ம் தேதியன்று நடக்கும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும். 2023-24 நிதியாண்டில் மேற்கொண்ட சேவைகள் மட்டும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். குறைந்தபட்சம் தமிழகத்தில் ஐந்து ஆண்டுகள் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.
சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். செய்த தொண்டு கண்டறியக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைகள், கல்லுாரிகள், பள்ளிகளில் பணியாற்றுவோர் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு, உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்படும். 2023 ஏப்., 1ம் தேதி, 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்; 2024 மார்ச் 31ம் தேதி 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில், மே 1 முதல், 15ம் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
இணைய தளத்தில் சமர்ப்பித்த விண்ணப்பம் நகல், உரிய ஆவணங்கள் மூன்று நகல்கள், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, காவல்துறையிடம் இருந்து சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவற்றை, மே, 17ம் தேதி மாலை, 4:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.