அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள் சங்கிலி, கடுக்கன் அணிய தடை
அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள் சங்கிலி, கடுக்கன் அணிய தடை
UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 09:34 AM
பெ.நா.பாளையம்:
கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) படிக்கும் மாணவர்கள், பயிற்சியின்போது காதுகளில் கடுக்கன், கழுத்தில் சங்கிலி போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என, அரசு தொழில் பயிற்சி நிலைய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை அரசு ஐ.டி.ஐ.,யில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஷிப்ட்டில் உரிய நேரத்திற்கு பயிற்சி நிலையத்துக்குள் வரவேண்டும்; தாமதமாக வரக்கூடாது. சீருடை, அடையாள அட்டை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
கால் சட்டை முழு நீளத்தில் இருக்க வேண்டும். தலைமுடி சரியாக வெட்டப்பட்டு இருக்க வேண்டும். நீளமான முடி வைத்துக் கொள்ளுதல், முடிக்கு கலர் அடித்தல் போன்றவற்றை செய்யக்கூடாது. கைகளில் வளையங்கள், கயிறுகள், ரப்பர் பேண்டுகள் அணிந்து வரக்கூடாது.
காதுகளில் கடுக்கன், கழுத்தில் சங்கலி அணிந்து வரக்கூடாது. பயிற்சி நிலைய வளாகத்துக்குள் போதை புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன்கள் பயிற்சி நிலைய வளாகத்துக்குள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, அரசு தொழில் பயிற்சி நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.