அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
அரசு கல்லுாரியில் பொது கலந்தாய்வு; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
UPDATED : ஜூன் 14, 2024 12:00 AM
ADDED : ஜூன் 14, 2024 08:01 AM

கோவை:
கோவை அரசு கலைக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நேற்று நடந்தது. பி.எஸ்சி., தாவரவியல், விலங்கியல், புவிஅமைப்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்தனர்.
அரசு கலைக் கல்லூரியில், பி.காம், பி.காம் சி.ஏ., பி.காம் ஐ.பி., பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.எஸ்சி., ஐ.டி. ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 10ம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டது. வணிகவியல், கணினி பாடப் பிரிவின் கீழ் 275 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 206 இடங்களுக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கலந்தாய்வில், 153 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் 53 காலியிடங்கள் உள்ளன.
அதைத்தொடர்ந்து, தாவரவியல், விலங்கியல், புவிஅமைப்பியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நேற்று நடத்தப்பட்டது. 144 இடங்களுக்கு 77 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தாவரவியலில் 21, விலங்கியலில் 31, புவிஅமைப்பியலில் 15 என மொத்தம் 67 காலியிடங்கள் உள்ளன.
பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன், சைக்காலஜி, புவியியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு இன்று நடக்கிறது.
புள்ளியியல், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், பாதுகாப்பியல், பொருளாதாரம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு நாளையும், வரலாறு, சுற்றுலா மற்றும் மேலாண்மைத் துறை, தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 15ம் தேதியும், கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.

