நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு: உயர்நீதிமன்றம் அதிருப்தி
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு: உயர்நீதிமன்றம் அதிருப்தி
UPDATED : ஜூலை 17, 2024 12:00 AM
ADDED : ஜூலை 17, 2024 12:24 PM

மதுரை:
நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தியை பதிவு செய்தது.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் உதித் சூர்யா. இவர் 2019 ல் நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சியடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்ததாக கண்டமனுார் போலீசார் மோசடி வழக்குப் பதிந்தனர். படிப்பை தொடர விருப்பமின்றி, விலகிக் கொள்வதாக கல்லுாரிக்கு உதித்சூர்யா கடிதம் அளித்தார்.
வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய புரோக்கராக செயல்பட்ட சென்னை கீழ்பாக்கம் தருண்மோகன் தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
சி.பி.சி.ஐ.டி., தரப்பு:
2019ல் வழக்கு பதியப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் ஈடுபட்டோம். விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. தேர்வு மைய கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட விபரங்களை தேசிய தேர்வு முகமையிடம் (என்.டி.ஏ.,) கோரினோம். அவை அழிந்துவிட்டதாக கூறிவிட்டனர். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி:
ஆதார் உள்ளிட்ட விபரங்களை சரிபார்க்காமல் எப்படி மாணவர்களை தேர்வு எழுத என்.டி.ஏ., அனுமதித்தது எனத் தெரியவில்லை. என்.டி.ஏ.,விடம் சில விபரங்களை சி.பி.சி.ஐ.டி., தரப்பு கோரவில்லை. இந்நிலையில் மேல் விசாரணைக்கு எப்படி அவகாசம் கோர முடியும். விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது; திருப்தி இல்லை. விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜூலை 23 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.