உற்பத்தி துறையில் வலுவான வளர்ச்சி தமிழக அரசு தகவல்
உற்பத்தி துறையில் வலுவான வளர்ச்சி தமிழக அரசு தகவல்
UPDATED : அக் 23, 2024 12:00 AM
ADDED : அக் 23, 2024 09:48 PM
சென்னை:
தமிழகத்தில், 2022 - 23 மற்றும் 2023 - 24ம் ஆண்டுகளில், உற்பத்தி துறை வலுவான வளர்ச்சியை கண்டுள்ளது என, தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலர் ரமேஷ்சந்த் மீனா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை, 2022 - 23 மற்றும் 2023 - 24 ஆண்டுகளுக்கு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை மதிப்பிட்டுள்ளது.
ஒப்புதல்
இது, மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தால், ஒப்புதல் அளிக்கப்பட்ட தரவுகளை பின்பற்றி தயாரிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், நிலையான விலையில், 2022 - 23ல், 14.51 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2023 - 24ல் 15.71 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.
இதே காலகட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 8.13 சதவீதத்தில் இருந்து, 8.23 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2022 - 23ல் 9.03; அடுத்த ஆண்டு 9.04 சதவீதமாக இருந்தது.
தமிழகம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், 2022 - 23ல், மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், சராசரி பொருளாதார வளர்ச்சி விகிதம் 2012 - 13 முதல் 2020 - 21 வரை, 5.80 சதவீதமாக இருந்தது.
முதன்மை துறையின் மொத்த மதிப்பு கூடுதல், 2022 - 23ல், 1.50 லட்சம் கோடி ரூபாயாகவும்; அடுத்த ஆண்டு, 1.56 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இதே காலகட்டத்தில் முறையே, தமிழகத்தின் மொத்த மதிப்பு கூடுதலில், முதன்மை துறையின் பங்கு, 11.61, 11.18 சதவீதமாக இருந்தது.
65 சதவீத பங்களிப்பு
தமிழகத்தில் தனிநபர் வருமானம், 2022 - 23ல், 1.66 லட்சம் ரூபாய்; 2023 - 24ல், 1.79 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் முறையே, நாட்டின் தனிநபர் வருமானம், 99,404 ரூபாயாகவும்; 1.06 லட்சம் ரூபாயாகவும் இருந்தது.
இந்த இரு ஆண்டுகளில், நாட்டின் தனிநபர் வருமானத்துடன் ஒப்பிடும் போது, தமிழகத்தின் தனிநபர் வருமானம், 1.68 மடங்கு அதிகம். உற்பத்தி துறை, 2022 - 23 மற்றும் 2023 - 24ல் 65 சதவீத பங்களிப்புடன் வலுவான வளர்ச்சியை கண்டுள்ளது.
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தி துறை பங்கு, 2022 - 23ல், 9.29 சதவீதம்; அடுத்த ஆண்டு 6.37 சதவீதம் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சேவை துறையின் மொத்த மதிப்பு கூடுதல், 2022 - 23ல் 6.60 லட்சம் கோடி ரூபாயாகவும், அடுத்த ஆண்டில் 7.21 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இந்த ஆண்டுகளில் முறையே, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேவைத்துறை பங்கு 45.47 சதவீதம் மற்றும் 45.90 சதவீதம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.