தமிழகத்தை முதல் மாநிலமாக்குவோம் அரசு விழாவில் ஸ்டாலின் சூளுரை
தமிழகத்தை முதல் மாநிலமாக்குவோம் அரசு விழாவில் ஸ்டாலின் சூளுரை
UPDATED : அக் 23, 2024 12:00 AM
ADDED : அக் 23, 2024 10:03 PM
நாமக்கல்:
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக நாமக்கல் மாவட்டம் விளங்குகிறது என அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன்் தெரிவித்தார்.
நாமக்கல் அடுத்த பொம்மைக்குட்டைமேட்டில், 810.28 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா, 16,031 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று நடந்தது.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
அருந்ததியர் சமுதாய மக்களுக்கு, தலைவர் கருணாநிதியால் வழங்கப்பட்ட, 3 சதவீத இட ஒதுக்கீட்டால், கடந்த 15 ஆண்டு காலமாக அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார, சமூக மேம்பாட்டில் பெற்று வரும் மேன்மையை பார்க்கும்போது, அந்த சட்டத்தை சட்டசபையில் கொண்டு வந்தவன் என்ற முறையில் மகிழ்ச்சி அடைகிறேன்.
விரைவில் நிறைவேற்றப்படும்
*மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கும் நாமக்கல்லுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
*சேந்தமங்கலம், கொல்லிமலை பகுதியில் விளையக்கூடிய பழங்கள், காய்கறிகளை பதப்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக, குளிர்பதன கிடங்கு வசதியுடன் கூடிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படும்.
*மோகனுாரில் இருக்கும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை என பெயரிடப்பட்டு, இன்னும் சிறப்பாக செயல்பட இந்த ஆலையின் எத்தனால் உற்பத்தி அலகு, 4 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
*பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வரக்கூடிய, நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு நெடுஞ்சாலைத்துறை மூலம், 30 கோடி ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்கப்படும். அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
முதல் மாநிலமாக்குவோம்
கடந்த சட்டசபை தேர்தலில் பெற்ற செல்வாக்கை விட, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தி.மு.க.,வுக்கு மதிப்பு சரிந்துவிட்டது என பேசி இருக்கிறார். அவர் இந்த உலகத்தில் இல்லை; கனவுலகில் இருக்கிறார்.
5 ஆண்டுகளில் நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என்று அனைத்திலும் தி.மு.க., தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஆக, தி.மு.க.,-வின் மதிப்பு சரியவில்லை. பழனிசாமி தன்னுடைய ஆட்சி காலத்தில் தமிழகத்தின் மதிப்பை அடமானம் வைத்தார். பதவியை காப்பாற்றுவதில் மட்டுமே குறியாக இருந்த காரணத்தால், பழனிசாமியின் மதிப்பு மட்டுமல்ல, அ.தி.மு.க.,வின் மதிப்பும் சரிந்து விட்டது. அடுத்தடுத்தும் வெற்றி பெறுவோம். அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்துவோம்.
இவ்வாறு பேசினார்.