பள்ளி சுவர்களில் ஓவியங்கள் அவசியம்! வழிகாட்டுகிறது கல்வித்துறை
பள்ளி சுவர்களில் ஓவியங்கள் அவசியம்! வழிகாட்டுகிறது கல்வித்துறை
UPDATED : டிச 25, 2024 12:00 AM
ADDED : டிச 25, 2024 10:19 AM

திருப்பூர்:
வகுப்பறைக்குள் குழந்தைகளின் படைப்பாற்றலை துாண்டும் வகையில் சுவர் ஓவியங்கள் இருக்க வேண்டும் என கல்வித்துறை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
மாநில திட்ட இயக்கம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பள்ளி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், உளவியல் மற்றும் சமூக நோக்கங்கள், குழந்தைகள் பாதுகாப்பில் பல்வேறு தரப்பினருக்கான கடமை, பொறுப்பு உள்ளிட்ட பலஅறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளி உட்கட்டமைப்பு தொடர்பாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்:பள்ளி கட்டடம், வளாகம், நுழைவு வாயில் மற்றும் அதை சுற்றியுள்ளபகுதிகள் இயற்கை இடர்பாடுகளை தாங்கி, உயிர் சேதம் ஏற்படாத வகையில் கட்டப்பட வேண்டும்.
பள்ளி நிர்வாகம், பணியாளர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர், இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வு பெற வேண்டும்.பள்ளி கட்டடங்களின் பாதுகாப்பு, உள்ளாட்சி நிர்வாகங்களால் உறுதி செய்யப்பட வேண்டும்.
மழலையர் மற்றும் ஆரம்பநிலை வகுப்புகள், தரை தளத்தில் இருக்க வேண்டும். ஒரு பள்ளியின் அதிகப்படியான தளம், தரை தளத்தில் இருந்து, மூன்றடுக்குக்கு மிகாமல் இருக்க வேண்டும். பள்ளி கட்டடங்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய நச்சுத்தன்மையுள்ள பொருட்களில் இருந்து துாரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
ஒரு பள்ளி கட்டடம் குழந்தை நேயமிக்க கட்டடமாக இருக்க வேண்டும். அதாவது, குழந்தைகளின் வயதிற்கேற்ற வகையில், அவர்களுக்கு பிடித்தமான வண்ணங்களில், கலைநயமிக்க ஓவியங்கள், படங்கள் சுவரில் வரையப்பட வேண்டும்.
வகுப்பறைக்குள் குழந்தைகளின் படைப்பாற்றலை துாண்டும் வகையில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டிருக்க வேண்டும்.பள்ளி வகுப்பறையை குறிப்பிட்ட கால இடைவெளியில் வர்ணம் பூசி சுத்தம் செய்யவேண்டும்.
ஜன்னல்களில் உடைந்த கண்ணாடிகள், கம்பிகள் வெளியே நீட்டியபடி இருக்க கூடாது. வகுப்பறையின் தளம் உடைந்தோ, சமதளமின்றியோ இருக்கக்கூடாது; அவை தேவையான கால கட்டங்களில் சரி செய்யப்பட வேண்டும் என்பது போன்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.