பத்மஸ்ரீ விருதில் ஆள்மாறாட்டம்; ஒடிசா டாக்டர் கோர்ட்டில் கதறல்
பத்மஸ்ரீ விருதில் ஆள்மாறாட்டம்; ஒடிசா டாக்டர் கோர்ட்டில் கதறல்
UPDATED : பிப் 13, 2025 12:00 AM
ADDED : பிப் 13, 2025 10:09 PM
கட்டாக்:
தன் பெயரை வைத்துள்ள மற்றொருவர் தனக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை வாங்கிவிட்டதாக, ஒடிசாவைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது, ஒடிசாவைச் சேர்ந்த அந்தர்யாமி மிஸ்ரா என்பவர் பெயருக்கு அறிவிக்கப்பட்டது.
இலக்கியம் மற்றும் கல்வி பிரிவில் ஆற்றிய சேவைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், ஒடிசாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் அந்தர்யாமி மிஸ்ராவுக்கு அந்த விருதை, ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
இந்நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த அந்தர்யாமி மிஸ்ரா என்ற டாக்டர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
டாக்டரான நான், ஒடியா உட்பட பல மொழிகளில், 29க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளேன். இதன்படியே என் பெயருக்கு விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு புத்தகம் கூடஎழுதாத பத்திரிகையாளரான அந்தர்யாமி மிஸ்ரா அந்த விருதை வாங்கியுள்ளார். என் பெயரை கொண்ட அவர் ஆள்மாறாட்டம் செய்து விருதை பெற்றுள்ளார்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் 24ம் தேதி, இரண்டு அந்தர்யாமி மிஸ்ராவையும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. இதில், உண்மையில் யாருக்கு விருது அறிவிக்கப்பட்டது என்பது தொடர்பாக விளக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.