UPDATED : ஏப் 30, 2025 12:00 AM
ADDED : ஏப் 30, 2025 10:09 AM
பெ.நா.பாளையம்:
அரசு பள்ளிகளில் கட்டணம் இல்லா ஆங்கில வழி கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் வீடு, வீடாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆசிரியர்கள், அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து, மாணவர் சேர்க்கை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆங்கில வழி கல்வி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. மாணவர்களின் தலைமை பண்பை வளர்த்திட மாணவத் தலைவன் தேர்தல், தினமும் யோகா, தியான பயிற்சிகள், மாணவர்களின் திறமையை வெளிக்கொணர மாணவர் மன்றம், வாரம் ஒரு முறை தொலைக்காட்சி வகுப்புகள், குறுந்தகட்டின் வாயிலாக ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி, பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு தமிழக அரசால் விலையில்லா பாடபுத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள், புத்தகப்பை, மதிய உணவு, காலை உணவு ஆகியவை வழங்கப்படுகின்றன என்ற விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பெட்டதாபுரம் வட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று, ஆசிரியர்கள் விநியோகம் செய்தனர்.
தலைமை ஆசிரியர் மதியழகன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சசிகலா, ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, ஆனந்தகுமார், கீதா, நந்தினி, குமரேசன் உள்ளிட்டோர் மாணவர் சேர்க்கை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

