கற்றல் திறனை மேம்படுத்த வாசிப்பு... எழுத்து... சொல் உச்சரிப்பு
கற்றல் திறனை மேம்படுத்த வாசிப்பு... எழுத்து... சொல் உச்சரிப்பு
UPDATED : நவ 24, 2025 08:36 AM
ADDED : நவ 24, 2025 08:37 AM

ஊட்டி:
மாணவர்களின் ஆங்கில கற்றல் திறனை மேம்படுத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன், கல்வி திறன் ஆகியவற்றை மேம்படுத்தி, அகில இந்திய அளவில் அனைத்து வாய்ப்புகளும் மாணவர்களுக்கு கிடைக்கும் நிலையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், திறன்கள் திட்டம் உள்ளிட்டவை மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜாலி போனிக்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கு, செயற்கை ஒலியியல் வாயிலாகஆங்கில எழுத்தறிவு கற்பிப்பதற்கு, வேடிக்கையான மற்றும் குழந்தைத்தனமான அணுகுமுறை தான், 'ஜாலி போனிக்ஸ்' பயிற்சி முறை என அழைக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் மட்டும் இருந்த இந்த பயிற்சி, தனியார் அமைப்பு வாயிலாக, அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக, ஒன்று முதல், 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, இரண்டு கட்டமாக, 'ஜாலி போனிக்ஸ் மற்றும் ஜாலி கிராமர்' பயிற்சி வழங்கப் படுகிறது. தமிழ் வழி பயிலும், அரசு பள்ளி குழந்தைகள், ஆங்கில எழுத்துகளில் உச்சரிப்பை எளிமையாக கற்க முடியும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி நீலகிரியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் குன்னூர், ஊட்டி, கூடலூர், கோத்தகிரி வட்டாரங்களில் இருந்து, 20 அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இந்த பயிற்சி வகுப்பில் மாணவர்களின் வாசிப்பு, எழுத்து, சொல் உச்சரிப்பு திறன்களில் முன்னேற்றம் காணுதல், வகுப்பறை ஈடுபாட்டை அதிகரித்தல், ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்துதல், தொடக்கநிலை மாணவர்கள் ஆங்கிலத்தை நம்பிக்கையுடன் பயன்படுத்துதல் போன்ற முன்னேற்றச் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
ஜாலி போனிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் பயிற்சியாளர் கோமதி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கும் புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மாவட்ட கல்வி அலுவலர் சின்னமாது, உதவித் திட்ட அலுவலர் அர்ஜூனன், மாவட்ட கலெக்டரின் நேர்முக எழுத்தர் (கல்வி) பிரமோத், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் உட்பட பங்கேற்றனர்.

