UPDATED : டிச 02, 2025 06:35 PM
ADDED : டிச 02, 2025 06:36 PM
மும்பை:
சிஐஐ 'பிக் பிக்சர்' உச்சிமாநாடு மும்பையில் நடைபெற்றது.
இதில் 'ஏஐ சகாப்தம் - படைப்பாற்றல் மற்றும் வர்த்தகத்தை இணைத்தல்' என்ற கருப்பொருளில் பேசிக் கொண்ட தகவல் & ஒலிபரப்புத் துறை செயலாளர் சஞ்சய் ஜாஜூ, செயற்கை நுண்ணறிவு ஊடக-பொழுதுபோக்கு துறையில் மிகப் பெரிய மாற்றத்தையும், அதே நேரத்தில் எல்லையற்ற வளர்ச்சி வாய்ப்புகளையும் உருவாக்கி வருவதாக கூறினார். இந்தியாவின் படைப்புப் பொருளாதாரம் தற்போது நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு ரூ.3 லட்சம் கோடி பங்களிப்புச் செய்தாலும், உலக ஊடக சந்தையில் இந்தியாவின் பங்கு 2% மட்டுமே என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தொழில்துறைக்கான சூழலை உருவாக்க அரசு முழு ஆதரவாக செயல்படும் என்றும், திறன் மேம்பாட்டிற்காக மும்பையில் இந்திய படைப்பு தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கான வளாகம் கோரேகான் ஃபிலிம் சிட்டியில் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என கூறினார். நிகழ்வில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

