UPDATED : மே 18, 2011 12:00 AM
ADDED : மே 18, 2011 03:01 PM
சென்னை: சென்னை பல்கலையின் துறைகளில் நடத்தப்படும் முதுநிலைப் படிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இணைப்பு கல்லூரிகளின் இளநிலை படிப்புகளில் படிக்கும், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவியர் பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழக மாணவர் இலவசத் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகள், ஆதரவற்ற மாணாக்கர்கள், விவசாயம் மற்றும் கூலி வேலை செய்யும் குடும்பத்தை சேர்ந்த மாணாக்கர்கள், குடும்பத்தில் முதன்முதலாக பட்டப்படிப்பு படிக்கும் மாணாக்கர்கள், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டம் கடந்த 2010-2011 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இதில் சேரும் மாணவர்கள், படிப்புக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் செலுத்த தேவையில்லை. இதில் சேருபவர்களுடைய பெற்றோர் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். கல்லூரிகளில் இளநிலை வகுப்புகளில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புபவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. முதுநிலை படிப்புகளுக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மாணவர் பெயர், பெற்றோர் பெயர், நிரந்தர முகவரி, தங்களின் இருப்பிடத்திலிருந்து 10 கி.மீ. சுற்றளவில் உள்ள 3 கல்லூரிகளின் பெயர்கள், அந்த கல்லூரிகளில் அளிக்கப்படும் படிப்புகளில் தாங்கள் சேர விரும்பும் படிப்பின் விவரங்களை ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி, மாணவர், பெற்றோர் மற்றும் படித்த பள்ளியின் தலைமையாசிரியர் கையொப்பத்துடன், பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகலுடன், குடும்ப அட்டையின் நகலை இணைத்து, 31-05-2011 என்ற தேதிக்குள், பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம், தொல்காப்பியர் வளாகம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
