அண்ணா பல்கலை மீண்டும் ஒன்றாக்கும் முடிவுக்கு வரவேற்பு
அண்ணா பல்கலை மீண்டும் ஒன்றாக்கும் முடிவுக்கு வரவேற்பு
UPDATED : ஜூன் 06, 2011 12:00 AM
ADDED : ஜூன் 06, 2011 10:30 AM
"அரசின் நடவடிக்கையால், அண்ணா பல்கலை மீண்டும் பழைய பெருமையை பெறுவதுடன், கல்வித் தரத்திலும் சிறந்து விளங்க வழி வகுக்கப்பட்டுள்ளது" என்று பாலகுருசாமி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், மற்ற பல்கலைகளின் துணைவேந்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை ஒருங்கிணைப்பதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பது தெரியாததால், பலரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.
தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அண்ணா பல்கலைக்கென தனி புகழும், மரியாதையும் இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உட்பட சமுதாயத்தின் மிகப்பெரிய மனிதர்களை, அண்ணா பல்கலை உருவாக்கியுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், சென்னை அண்ணா பல்கலை, ஐந்து பல்கலைக் கழகங்களாக படிப்படியாக பிரிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டது.
சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி ஆகிய ஐந்து இடங்களில், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களை முந்தைய அரசு உருவாக்கியது. இதற்கென தனி துணைவேந்தர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவற்றில், கோவை, திருச்சி அண்ணா பல்கலைக் கழகங்கள், பல்வேறு புதிய பாடத்திட்டங்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றன. மொத்தம் உள்ள 478 பொறியியல் கல்லூரிகளும், ஒவ்வொரு பல்கலைக்கும் பிரித்து கொடுக்கப்பட்டன.
இதில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஐந்து பல்கலைக் கழகங்களின் கீழ் 474 கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. சென்னையில் உள்ள அண்ணா பல்கலை, நான்கு கல்லூரிகளை நடத்தி வருகிறது. நிர்வாக வசதிக்கென கூறி, ஐந்து பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டாலும், அதற்கென முழுமையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க., தலைமையிலான அரசு அமைந்த பின் கவர்னர் உரையில், ஐந்து பல்கலைகளும், சென்னை அண்ணா பல்கலையுடன் ஒருங்கிணைக்கப்படும் என்று, அறிவிக்கப்பட்டது.
அரசின் இந்த நடவடிக்கையை, சென்னை அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர்கள் கலாநிதி, பாலகுருசாமி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து, கலாநிதி கூறியதாவது: ஐந்து அண்ணா பல்கலைக் கழகங்களும் ஒருங்கிணைந்து செயல்படாததால், கல்வியின் தரம் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது, மீண்டும் அண்ணா பல்கலை என்ற ஒரே கூரையின் கீழ், அனைத்து பல்கலைகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கதக்கது. புதிதாக உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழகங்கள், முழுமையாகச் செயல்படவில்லை. அதனால், புதிய அரசு எடுத்த நடவடிக்கை சரியான முடிவு. சர்வதேச தரத்திற்கு அண்ணா பல்கலைக் கழகம் உயர வேண்டுமெனில், ஆராய்ச்சித் திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கலாநிதி கூறினார்.
பாலகுருசாமி கூறியதாவது: அண்ணா பல்கலைக் கழகத்தை, பல இடங்களில் துவங்கி செயல்படுத்தியது தவறில்லை. ஆனால், அவற்றை முறையாகச் செய்யவில்லை. குறிப்பாக, எந்த பல்கலையிலும் முழுமையான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை. பெயரளவில் தான், அந்த பல்கலைக் கழகங்கள் இயங்கி வந்தன. இதனால், கல்வித்தரம் வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக, உயர்கல்வி மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம், தேசிய அளவில் பெயர் பெற்றிருந்த நிலையில், அதை உலகளவில் எடுத்துச் செல்லும் வாய்ப்பை தவற விட்டுவிட்டனர்.
இழந்த பெருமையை மீண்டும் அண்ணா பல்கலை பெறுவதற்கும், தேசிய அளவில் மீண்டும் தரத்தில் சிறந்து விளங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாலகுருசாமி கூறினார்.
அண்ணா பல்கலைகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை கல்வியாளர்கள் வரவேற்றாலும், தற்போது ஐந்து இடங்களிலும் பயிலும் மாணவர்களை, சென்னை அண்ணா பல்கலையின் கீழ் கொண்டு வருவதிலும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை மாற்றுதல் உள்ளிட்ட விவகாரங்களில், அரசு எடுக்கும் முடிவு பற்றி இப்பல்கலைக் கழகங்களில் பரபரப்பான எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.
