அரசு அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்
அரசு அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்
UPDATED : ஜூன் 08, 2011 12:00 AM
ADDED : ஜூன் 08, 2011 10:28 AM
கடந்த ஆண்டில், 6,195 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக, முந்தைய அரசு அறிவித்தது. இதையடுத்து, 2010, மே 12 முதல் 2011, பிப்., 18 வரை, பல கட்டங்களாக ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 1:5 என்ற விகிதாச்சாரத்தில், பதிவுதாரர்கள் அழைக்கப்பட்டனர்.
இணையதளத்தில் வெளியீடு: பின், 4,179 பேருக்கு பள்ளிக் கல்வித் துறையிலும், 1,155 பேருக்கு துவக்கக் கல்வித் துறையிலும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்புகள், இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இன்னும் பலருக்கு, முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 1,200 பேருக்கு, உயர்நிலைப் பள்ளியில் அமல்படுத்தப்பட்ட, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் சேர, நியமன கடிதங்கள் அனுப்பப்பட்டன.
இப்பணிகள், கடந்த ஜனவரி, பிப்ரவரியில் நடந்தன. மார்ச்சில் தேர்தல் அறிவிப்பு வெளியானதும், அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன. இதனால், பணி நியமன ஒதுக்கீடு மற்றும் நியமன கடிதம் பெற்றவர்கள், கலக்கம் அடைந்தனர். தேர்தல் நடைமுறைகள் முடிந்து, உடனே பணி வாய்ப்பு கிடைத்துவிடும் என எதிர்பார்த்தனர். தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்று, பல நாட்கள் ஆகிவிட்டன. இதுவரை பணிநியமனம் தொடர்பாக எந்த அறிவிப்பும், தகவலும் இல்லாததால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும் வேதனையில் உள்ளனர்.
