UPDATED : ஜூன் 20, 2011 12:00 AM
ADDED : ஜூன் 20, 2011 10:19 AM
பிளஸ் 2 தேர்வில் 68 சதவீத மதிப்பெண் பெற்றும் வறுமையினால், உயர்படிப்பை தொடர முடியாமல் மாற்று திறனாளி மாணவி பத்மபிரியா உள்ளார்.
மதுரை மேலூர் அருகே வண்ணாம்பாறைப்பட்டி கிராம கோயில் பூசாரி கிருஷ்ணமூர்த்தி அய்யர். மனைவி சுப்புலட்சுமி. கோயிலில் கிடைக்கும் வருமானத்தை நம்பிய இவர்களுக்கு ஸ்ரீவித்யா, பத்மபிரியா என இரண்டு மகள்கள். பத்மபிரியா பிறவியிலேயே வாய் பேச முடியாத காது கேளாதவர்.
படிப்பில் ஆர்வமாக இருந்த பத்மபிரியா மதுரை எல்லீஸ் நகர், குளத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார்.
பாளையங்கோட்டை புளோரா ஸ்வாசன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். பொது தேர்வில் தமிழ்-142, கம்ப்யூட்டர் சயின்ஸ்-101, பொருளாதாரம்-119, வணிகவியல்-184, கணக்கியல்-137 என மொத்தம் 683 மதிப்பெண் பெற்றார். மாற்று திறனாளிகளுக்கு ஆங்கிலம் கிடையாது. 68 சதவித மதிப்பெண் பெற்ற இவர் கல்லூரி படிப்பை சென்னை அடையாறு கல்லூரி அல்லது கோவில்பட்டி இன்ஜினியரிங் கல்லூரியில் மட்டுமே தொடர முடியும்.
அங்கு சென்று படிக்குமளவுக்கு வீட்டில் வசதியில்லை. பிறவியில் குறையுடன் பிறந்தாலும் தன்னம்பிக்கையுடன் படித்து வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இம்மாணவிக்கு உதவ நினைப்போர் 95975 25575 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.
