திருவாரூர், தேனி மருத்துவ கல்லூரிகளில் அட்மிஷன் நடக்குமா?
திருவாரூர், தேனி மருத்துவ கல்லூரிகளில் அட்மிஷன் நடக்குமா?
UPDATED : ஜூன் 24, 2011 12:00 AM
ADDED : ஜூன் 24, 2011 10:22 AM
ஒவ்வொரு ஆண்டும், மருத்துவக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதி, மருத்துவர்கள் எண்ணிக்கையை ஆய்வு செய்ய, இந்திய மருத்துவ கவுன்சில், குழு அமைத்து ஆய்வு செய்கிறது. இக்குழுவின் அறிக்கை அடிப்படையில், இந்திய மருத்துவ கவுன்சிலின், யு.ஜி., செக்ஷன் முடிவுகளை அறிவிக்கும்.
இம்முடிவுகளின் அடிப்படையில் தான், மருத்துவக் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கைக்கும், மருத்துவப் படிப்பிற்கான இடங்களை அதிகரிக்கவும், இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளிக்கிறது. இக்குழு, சமீபத்தில், நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, ஆய்வக வசதி, மருத்துவர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, தம் ஆய்வறிக்கையை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் அளித்துள்ளது.
அதன்படி, திருவாரூர், சிவகங்கை மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2011-12ம் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சென்னையில் உள்ள, மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் பணிபுரிவது, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தெரிய வந்துள்ளது.
இதனால், இக்கல்லூரிகளிலும் புதிய மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், சென்னையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கையை, 165லிருந்து 200 ஆகவும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கையை, 150லிருந்து 250 ஆக உயர்த்தவும், அனுமதி கிடைக்கவில்லை. இவை உள்ளிட்ட, நாடு முழுவதும், 115 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், திருவாரூர் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான, 200 இடங்கள் நிரப்பப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. கவுன்சிலிங் துவங்குவதற்கு முன், இவ்விரு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
இந்திய மருத்துவ கவுன்சிலின் வரையறைகளை பூர்த்தி செய்தால், ஜூலை 31ம் தேதிக்குள், திருவாரூர் மற்றும் தேனி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை, செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடித்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
