UPDATED : ஆக 14, 2011 12:00 AM
ADDED : ஆக 14, 2011 11:37 AM
சென்னை:
ஆண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள நடைமுறையை மாற்ற வேண்டும் எனவும், தேர்வுகளுக்கு இடையில், போதிய விடுப்பு தேவை எனவும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலையின்கீழ் இயங்கும், மருத்துவக் கல்லூரிகளில் பயிலும், முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு, சமீபத்தில் நடந்து முடிந்தது. உடலியல், உடற்கூறியல் மற்றும் உயிரி வேதியியல் ஆகிய பாடங்களில், தலா இரண்டு தாள்களைக் கொண்டு இத்தேர்வு நடத்தப்படுகிறது.
'நான் - செமஸ்டர்' முறையில் விடுப்பின்றி, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை, தொடர்ந்து இத்தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு பாடமும், இரண்டு வினாத்தாள்களைக் கொண்ட இத்தேர்வில், மாணவர்கள் தேர்ச்சிபெற, ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெறவேண்டும் என்ற புதிய நடைமுறை, இந்தாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு தாள்களையும் சேர்த்து, 100 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி பெறலாம் என்ற நடைமுறை சென்ற ஆண்டு வரை இருந்தது. அதற்கு மாறாக கொண்டு வரப்பட்டுள்ள இப்புதிய முறையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தேர்வு முறையில், பழைய நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில், முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., பயிலும் மாணவர்கள் சார்பில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சருக்கு, கோரிக்கை மனுவும் அனுப்பப்பட்டுள்ளது.
