தொலைநிலைக் கல்வி முறையில் பி.எட். படிப்பை படிக்கலாமா?
தொலைநிலைக் கல்வி முறையில் பி.எட். படிப்பை படிக்கலாமா?
UPDATED : ஆக 21, 2011 12:00 AM
ADDED : ஆக 21, 2011 11:37 AM
கல்வித்துறையில் அரசின் அக்கறை, 6வது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகள் மற்றும் தனியார் துறையினர் பெருமளவில் கல்வித்துறையில் முதலீடு செய்திருப்பது போன்ற பல காரணங்கள் ஆசிரியர் பணிக்கான ஆட்களின் தேவைகளை அதிகரித்துச் செல்வதோடு, அதன் மீதான ஆர்வத்தையும் அதிகரிக்கின்றன. இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தவுடன், 1 வருடத்தில் படிக்கக்கூடிய
ஏனெனில், இதன்மூலம் ஒருவர் பட்டதாரி ஆசிரியர் என்ற தகுதி நிலையை அடைவதுடன், அரசுப் பணியைப் பெறுவதற்கான தகுதியையும் பெறுகிறார். இந்த B.Ed. படிப்பானது, ரெகுலர் முறையில் மட்டுமின்றி, தொலைநிலைக் கல்வி முறையிலும் வழங்கப்படுகின்றன. அண்ணாமலை மற்றும் MD ரோடக் பல்கலைக்கழகங்கள், ஒழுங்குமுறை விதிகள் ஏற்படுத்தப்படுவதற்கு பல வருடங்களுக்கு முன்பே தொலைநிலை B.Ed. படிப்பை தொடங்கிவிட்டன.
தொலைநிலைக் கல்விமுறையில் B.Ed. படிப்பது சிறந்ததா? மற்றும் மதிப்புவாய்ந்ததா? என்பதை இக்கட்டுரை அலசுகிறது.
அமலாக்கத்தில் உள்ள குறைபாடு
சீனாவில், வெற்றிகரமாக, நடைமுறையில் இருந்த முறை, தொலைநிலைக் கல்விமுறையிலான B.Ed. படிப்பிற்கு இந்தியாவில் பின்பற்றப்பட்டது. ஆனால் இம்முறை இந்தியாவில் ஒழுங்காகப் பின்பற்றப்படவில்லை. இதனால், தொலைநிலைக் கல்வி B.Ed. படிப்பானது, நேரடி பிஎட் படிப்பைவிட மதிப்புக் குறைவானதாக ஆகி, இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது. அதேசமயம், இந்தப் படிப்பானது, இக்னோவில் தொலைநிலைக் கல்வியாக ஆரம்பிக்கப்பட்டு, வெற்றிகரமான முறையில் நடைபெறுகிறது.
ஒழுங்கற்ற செயல்பாடு
ஒழுங்குமுறை விதிகள் வகுக்கப்படும் முன்பே, பல பல்கலைக்கழகங்கள், தொலைநிலை B.Ed. படிப்புகளை நடத்துவதில், தங்களின் சொந்த நடைமுறைகளைப் பின்பற்றி வந்தன. அத்தகைய பாடத்திட்டங்கள், தரம் மற்றும் ஒழுங்கமைப்பில் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருந்தன. இதனால், இவற்றில் பல முறைகேடுகள் நடக்க ஆரம்பித்தன. இதனால், தொலைநிலை B.Ed. படிப்பின் மதிப்பு குறையத் தொடங்கியது.
தொலைநிலை B.Ed. படிப்பில் சேர்வதற்கு முன்பாக மாணவர்கள் சில அம்சங்களை கவனிக்க வேண்டும். அத்தகைய B.Ed. படிப்பை நடத்தும் ஒரு கல்வி நிறுவனம் NCTE அங்கீகாரம் பெற்றுள்ளதா? என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால் பல சமயங்களில் NCTE செயல்பாடுகளே முரண்பட்டு உள்ளன. இதனால் மாணவர்கள் குழப்பமடைகிறார்கள். சரியான முறையில் அமைந்த ஒரு தொலைநிலை B.Ed. படிப்பே, எதிர்காலத்தில் மதிப்பைப் பெறும்.
கட்டுக்கடங்காத விதிமுறைகள்
கடந்த 1990களில் 1 வருட B.Ed. தொலைநிலைக் கல்வி இருந்தது. B.Ed. கல்லூரிகள் பெரியளவில் இல்லாத அந்த காலகட்டத்தில், இருந்த அத்தகைய படிப்பில் ஸ்டடி சென்டர்கள் மற்றும் தொடர்பு வகுப்புகள் போன்றவை கிடையாது. பாட உபகரணங்களை, பல்கலைக்கழகங்கள் மொத்தமாக அனுப்பிவிடும். தேர்வுகள் மற்றும் Practical செயல்பாடுகளுக்கு மட்டும் நேரில் செல்ல வேண்டியிருக்கும்.
புதியக் கொள்கை
கடந்த 1995ம் ஆண்டு, ஆசிரியர் பயிற்சி கல்வியை வரையறை செய்யும் உச்சபட்ச அமைப்பான NCTE ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பானது, தொலைநிலைக் கல்வி B.Ed. படிப்பில் கடந்த 2009ல் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே, தொலைநிலைக் கல்வி மூலம் B.Ed. படிக்க முடியும் என்ற நிலை உருவானது.
இன்றைய நிலை
நாட்டின் முதன்முதலில் 1932ம் ஆண்டில் ஆந்திராவில் B.Ed. படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இன்று அம்மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட B.Ed. கல்லூரிகள் உள்ளன. இதனால், இன்றைய நிலையில் தொலைநிலைக் கல்விமுறையிலான B.Ed. படிப்புகளுக்கு மவுசு குறைந்துவிட்டது. இந்தப் படிப்பிற்கு, 2 வருடம் ஆசிரியர் பணி அனுபவமும் வேண்டியிருப்பதால், பெரும்பாலான மாணவர்கள் ஒரு வருட காலம் கொண்ட நேரடி B.Ed. படிப்பையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனெனில், இப்படிப்பிற்கு தொலைநிலை B.Ed. கல்விபோல், 2 வருடம் செலவிட வேண்டியதில்லை.
அதேசமயம், ஏற்கனவே ஆசிரியர் பணியில் இருப்பவர்கள், அதிக பணம் செலவிட விரும்பாதவர்கள், தொலைநிலை B.Ed. படிப்பை தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனெனில், இக்னோ(IGNOU) போன்ற கல்வி நிறுவனங்களில் தொலைநிலை B.Ed. படிப்பை மேற்கொள்பவர்கள், நேரடி B.Ed. படிப்புடன் ஒப்பிடுகையில், கல்வி கட்டணமாக மிகக் குறைந்த தொகையையே செலவழிக்கிறார்கள்.
