தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத் திறனாளி மாணவர்கள் சாதனை படைக்க பயிற்சி

மாற்றுத் திறனாளி மாணவர்கள் சாதனை படைக்க பயிற்சி

மாற்றுத் திறனாளி மாணவர்கள் சாதனை படைக்க பயிற்சி


UPDATED : அக் 14, 2011 12:00 AM

ADDED : அக் 14, 2011 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2011 12:00 AM ADDED : அக் 14, 2011 09:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காட்டில் அமைந்துள்ளது ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டு தேசிய நிறுவனம். மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்நிறுவனத்தில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்புக் கல்வி, தொழிற் பயிற்சி, உளவியல் சிகிச்சை, மறுவாழ்வு மருத்துவம் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாற்றுத் திறனாளிகள் இதில், பயனடைந்து வருகின்றனர். இந்நிறுவனத்தில், மாற்றுத் திறனாளி மாணவர்களும் சமுதாயத்தில் மற்றவர்களைப் போல், சாதிக்க செய்யும் நோக்கிலும், அவர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் சிறப்புக் கல்வி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில், கண்பார்வை மற்றும் காது கேளாமை, மனவளர்ச்சி மற்றும் மூளை முடக்குவாதம், புற உலக சிந்தனை பாதிப்பு உள்ளிட்ட குறைபாடுகளுடைய நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தொடுவழிப் பயிற்சி, உபகரணங்கள் கொண்டு விளக்குதல், படவிளக்கப் பயிற்சி, யோகா, உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு செயல்வழி விளக்க பயிற்சிகள், இந்த சிறப்புக் கல்வியில் வழங்கப்படுகின்றன.

மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கிய சிறப்புக் கல்வி ஆசிரியர்கள், "மாற்றுத் திறனாளிகளை வயது அடிப்படையில், மூன்று பிரிவுகளாக பிரித்து, அவர்களின் குறைபாடுகளுக்கேற்ப தனித்தனியாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மாணவர்கள் தங்களது அன்றாட சுய தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளவும், சிந்திக்கும் திறன் மற்றும் சமுதாய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

செயல்முறையில் கல்வி போதிக்கப்படுகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு விளையாட்டு, யோகா, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளும், சுயதொழில் ஆர்வத்தை அதிகரிக்க தொழிற் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன" என்றனர்.

நிறுவன இயக்குனர் நீரதா சந்திர மோகன், "சிறப்பு கல்வி மையத்தில் வழங்கப்படும் இப்பயிற்சிகளின் மூலம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, வாழ்வின் முன்னேற்றத்திற்கும் வழிசெய்கிறது. இப்பயிற்சிகளில் கலந்து கொள்ள சென்னை முழுவதும் இருந்து, தினசரி ஏராளமான மாற்றுத் திறனாளிகள் வந்து செல்வதால், முக்கியப் பகுதிகளுக்கு காலை மற்றும் மாலை வேளையில் இலவச பஸ் வசதிகள் இயக்கப்படுகின்றன" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us