UPDATED : நவ 05, 2011 12:00 AM
ADDED : நவ 05, 2011 09:58 AM
மழைக் காலத்தில் பரவும் தொற்று நோய்களைத் தடுப்பதற்காக, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார திட்டத்தை, சென்னை மாநகராட்சி துவக்கி உள்ளது.
இத்திட்டத்தின்படி, சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, மாநகராட்சி சுகாதாரக் குழுவினர் சென்று டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட கொசுவினால் ஏற்படும் நோய்கள், அதைத் தடுக்கும் வழிகள், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திப் படத்தை திரையிடுவர். பின், படத்தில் வரும் காட்சிகள் மூலம் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு நேரடியாக விளக்கம் அளிப்பார்கள். தொற்று நோய் தடுப்பு முறைகள் குறித்த துண்டு பிரசுரங்களும், விளக்கக் குறிப்புகளும் அளிக்கப்படும்.
இத்திட்டம் சென்னை, கீழ்ப்பாக்கம் கோல சரஸ்வதி பள்ளியில், நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இதுகுறித்து, மாநகராட்சி சுகாதார அதிகாரி குகானந்தம் கூறியதாவது: இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவருக்கும், "மருத்துவ தூதர்&' அட்டை வழங்கப்படும். சென்னை முழுவதும் 3 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அட்டையில், "என் வீட்டிற்கும், தெருவுக்கும் நான் ஒரு மருத்துவ தூதன். கொசுக்களை ஒழிப்போம், டெங்கு, சிக்குன் குனியாவை தடுப்போம்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்திட்டத்தை செயல்படுத்த, ஒவ்வொரு மண்டலத்துக்கும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லா மாநகராட்சி சுகாதார மையங்களிலும், தேவையான மருந்துகள் வைக்கப்பட்டுள்ளன. புகை அடிப்பது உள்ளிட்ட கொசு ஒழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொசுத் தொல்லை, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், இலவச தொலைபேசி எண் 1913-ஐ தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். இவ்வாறு குகானந்தம் கூறினார்.
